மின்கம்பங்களில் புதிய இன்சுலேட்டர் பொருத்தும் பணி
திருநகரி பகுதியில் மின்கம்பங்களில் புதிய இன்சுலேட்டர் பொருத்தும் பணி நடந்தது.
திருவெண்காடு:
சீர்காழி மின்வாரிய கோட்ட உதவி பொறியாளர் விஜய பாரதி மேற்பார்வையில் திருநகரி, நெப்பத்தூர், திருக்குரவலூர், முள்ளி பள்ளம், மங்கை மடம் மற்றும் கீழ சட்டநாதபுரம் பகுதிகளில் திருவெண்காடு மின்வாரிய உதவி பொறியாளர் ரமேஷ், ஆக்க முகவர் குருமூர்த்தி, மின் பாதை ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்களுடன் இணைந்து மேற்கண்ட இடங்களில் மின் பாதையில் அடர்ந்து காணப்பட்ட மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மரில் பழுதடைந்து இருந்த இன்சுலேட்டர்களை அகற்றிவிட்டு,150 புதிய இன்சுலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் பழுதடைந்து சாய்ந்த நிலையில் காணப்பட்ட 7 மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டன. இதுகுறித்து சீர்காழி உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் விஜய பாரதி கூறுகையில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது ஏதேனும் குறைகள் இருந்தால் மின்வாரியத்தை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என்றார்.