தமிழகம் முழுவதும் மீண்டும் மாணவர் மன்றம் தொடங்க நிர்வாகிகளுக்கு திமுக அறிவுறுத்தல்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆண்டு முழுவதும் நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் குறித்து திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து பள்ளி, கல்லூரிகளில் கவியரங்கம், கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகள் ஆகியவற்றை நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களுக்கு இடையேயான வினா விடைகள் போட்டியை நடத்தவும் மகளிர் அணிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நூற்றாண்டில், அவர் நடத்திய தமிழ்நாடு மாணவர் மன்றம் மீண்டும் உருவாக்கப்பட்டு கல்லூரிகளில் தனி அமைப்பாக செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாணவர் அணிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகளிர் அணியின் சார்பில் அகில இந்திய அளவிலான பெண் தலைவர்களின் கருத்தரங்கம் குறித்து நடத்தும் பணியினை மகளிர் அணிக்கு திமுக தலைமை கழகம் ஒப்படைத்துள்ளது.
அத்துடன் மகளிர் அணியின் சார்பில் கலைஞரும், மகளிர் மேம்பாடும் என்னும் தலைப்பில் பயிற்சி பாசறை மற்றும் பயிலரங்கங்கள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும் மகளிர் தொண்டர் அணிக்கு திமுக தலைமை கழகம் அறிவுறுத்தியுள்ளது.