போக்குவரத்துக்கு இடையூறின்றி விநாயகர் சிலைகளை அமைக்க அறிவுறுத்தல்


போக்குவரத்துக்கு இடையூறின்றி விநாயகர் சிலைகளை அமைக்க அறிவுறுத்தல்
x

போக்குவரத்துக்கு இடையூறின்றி விநாயகர் சிலைகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு ஜெயங்கொண்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் குறித்த ஆலோசனை மற்றும் புரிந்துணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் உடையார்பாளையம் வேலுச்சாமி, ஆண்டிமடம் முத்துக்குமரன், மீன்சுருட்டி பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் துணை சூப்பிரண்டு பேசுகையில், ரசாயனத்தால் செய்யப்பட்ட சிலைகளுக்கு அனுமதி இல்லை. சிலைகளை 4 முதல் 5 அடி உயரத்திற்கு மேல் அமைக்கக்கூடாது. கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட சிலைகளை தவிர புதிய சிலைகள் வைக்கக்கூடாது. புதிய வழித்தடத்தில் ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்படாது. அனுமதி பெறாமல் சிலை வைக்கக்கூடாது. சிலைகள் அமைக்கும் இடம் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் சாலையோரமாக அமைக்க வேண்டும்.

சிலை அமைவிடத்தில் கொட்டகை அமைக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய கீற்றுக் கொட்டகை அமைக்கக்கூடாது. தகர சீட்டால் கொட்டகை அமைக்க வேண்டும். பாதுகாப்புக்காக சிலை அமைப்பு கமிட்டி மூலம் ஒரு சிலைக்கு 3 பேர் என நியமிக்கப்பட்டு, அவர்கள் சிலையை பாதுகாக்க வேண்டும். கண்டிப்பாக பட்டாசு வெடிக்கக்கூடாது. விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் வழித்தடத்தில் பிற மதத்தினர் குடியிருப்பு, தேவாலயம், மசூதி ஆகியவற்றின் அருகில் ஆரவாரம் செய்வது, மேளம் அடிப்பது, கோஷங்கள் எழுப்புவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் சாலையின் ஓரமாக ஊர்வலம் செல்ல வேண்டும். நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகளை தவறாது அனைவரும் பின்பற்ற வேண்டும். மேலும் குடிபோதையில் ரகளை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கூட்டத்தில் ஜெயங்கொண்டம், தா.பழூர், மீன்சுருட்டி, ஆண்டிமடம், உடையார்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சிலைகள் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 139 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஊர்வலமானது ஜெயங்கொண்டம் வேலாயுதநகரில் இருந்து, பஸ் நிலையம் அண்ணா சிலை, 4 ரோடு வழியாக அணைக்கரைக்கு சென்று சிலைகளை கரைக்க அறிவுறுத்தப்பட்டது.


Next Story