விநாயகர் சதுர்த்தி விழாவை சமுதாய நல்லிணக்கத்துடன் கொண்டாட அறிவுறுத்தல்


விநாயகர் சதுர்த்தி விழாவை சமுதாய நல்லிணக்கத்துடன் கொண்டாட அறிவுறுத்தல்
x

விநாயகர் சதுர்த்தி விழாவை சமுதாய நல்லிணக்கத்துடன் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விழா அமைப்பாளர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் நீரில் எளிதில் கரையக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சிலைகளை வழிபாடு நடத்துவதற்கு பயன்படுத்த வேண்டும்.

சிலை நிறுவும் இடங்களில் மின்சாரத்துறையினரை தொடர்பு கொண்டு முறையான மின் இணைப்புகளை பெற்று பயன்படுத்த வேண்டும். மேலும், விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான வாகன ஊர்வலம் போலீசாரால் அனுமதி அளிக்கப்பட்ட குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட வேண்டும். போலீசாரால் குறிப்பிடப்படும் வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதி அளிக்கப்பட்ட வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை எவ்வித பிரச்சினைகளும் இன்றி சமுதாய நல்லிணக்கத்துடன் சுமூகமான முறையில் கொண்டாட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் டாக்டர் செந்தில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அரவிந்தன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், விழா அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story