ரூ.2.20 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் அலுவலக மைய கட்டிடம்


ரூ.2.20 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் அலுவலக மைய கட்டிடம்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 5:00 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் ரூ.2.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த புதிய வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சிவகங்கை

சிவகங்கையில் ரூ.2.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த புதிய வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

புதிய கட்டிடம் திறப்பு

சிவகங்கையில் தொண்டி ரோட்டில் ரூ.2.20 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புதிய வேளாண்மை விரிவாக்க மையகட்டிடம் கட்டபட்டுள்ளது. வட்டார அளவிலான அனைத்து வேளாண்மைத்துறை அலுவலகங்களும் ஒரே கட்டிடத்தில் செயல்படும் வகையில் புதிதாக கட்டப்பட்ட அந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட கட்டிடத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் குத்து விளக்குஏற்றி அலுவலகத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:- இந்த ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் விற்பனை, வேளாண்மை பொறியியல் மற்றும் விதைச்சான்று உள்ளிட்ட அனைத்து துறை அலுவலகமும் செயல்படும்.

நலத்திட்ட உதவிகள்

இந்த மையங்கள் வாயிலாக தொழில்நுட்ப ஆலோசனைகள், இடுபொருட்கள் வினியோகம், மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் செயலாக்கம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் ஒரே இடத்தில் விவசாயிகள் பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றன. இந்த மையம் சேமிப்பு கிடங்குகளுடன் கூடியது. இதுவரை, சிவகங்கை மாவட்டத்தில் 3 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் 5 துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் முரேஷ்குமார், வேளாண்மை துணை இயக்குனர் பன்னீர்செல்வம், வேளாண்மை உதவி இயக்குனர்கள் வளர்மதி, பரமேஸ்வரன், சக்திவேல், உதவிசெயற்பொறியாளா் இந்திரா, உதவி பொறியாளர்கள் வனராஜ், சண்முகநதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story