மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையம்: முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு
மன்னார்க்குடியில் ரூ.26¾ கோடியில் அமையவுள்ள ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலைய பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை,
2021-22-ம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், மன்னார்குடி நகராட்சி, காமராஜர் பஸ் நிலையம் மற்றும் சந்தைப்பேட்டை பஸ் நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மன்னார்குடி புதிய ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையக் கட்டுமான பணிகளுக்காக ரூ.26.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பஸ் நிலையத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் உள்ள நகராட்சி கடைகள் காலி செய்யப்பட்டு, பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய பஸ் நிலையத்தில் 50 பஸ் நிறுத்தங்கள், 117 புதிய கடைகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடம் ஆகியவை அமைக்கப்பட இருக்கிறது.
மு.க.ஸ்டாலின் ஆய்வு
இந்தநிலையில் மன்னார்குடியில் ரூ.26.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலைய பணிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, புதிய ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலைய கட்டுமான பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
முன்னதாக திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள 4,250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது டி.ஆர்.பாலு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் மாவட்ட கலெக்டர் தி.சாருஸ்ரீ உள்பட பலரும் பங்கேற்றனர்.