ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரம்:அ.தி.மு.க. நலத்திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது;முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரம் செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அ.தி.மு.க.வின் நலத்திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது என்று கூறினார்.
சோலார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரம் செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அ.தி.மு.க.வின் நலத்திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது என்று கூறினார்.
இரட்டை இலைக்கு...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
அதன்படி நேற்று ஈரோடு பெரியார் நகர், கிராமடை, அண்ணா நகர், வேலா வீதி, தேவா வீதி, லட்சுமணன் வீதி, அவ்வையார் வீதி, என்.ஜி.ஜி.ஓ காலனி, மாரப்பன் வீதி, பூசாரி வீதி, பூசாரி சென்னிமலை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.
வாக்கு சேகரிப்பு
சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செம்மலை, பி.சி.ராமசாமி, ஈரோடு அ.தி.மு.க. பகுதி செயலாளர் மனோகரன், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் விடியல் சேகர், ஈரோடு பா.ஜ.க. தெற்கு மாவட்ட செயலாளர் வேதாந்தம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ்,
எம்.எல்.ஏ.க்கள் மணி (ஓமலூர்), ஜெய்சங்கரன் (ஆத்தூர்), சித்ரா (ஏற்காடு), நல்லதம்பி (கெங்கவல்லி), ராஜமுத்து (வீரபாண்டி), சேலம் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், மெடிக்கல் ராஜா, ராமசாமி, ராஜா, வரதராஜ், வெங்கடேஷ், சேரன் செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.
குற்றச்சாட்டு
வாக்காளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியை வெல்வதே அ.தி.மு.க.வின் இலக்கு. தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தாலிக்கு தங்கம், மடிக்கணினி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் மக்கள் நல திட்டங்கள் அனைத்தையும் தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகியும் அவர்கள் தேர்தலின் போது கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. எனவே அவர்கள் வாக்கு கேட்டு வரும்போது பெண்களுக்கு மாதந்தோறும் 1000 கொடுப்பீர்கள் என்று சொன்னீர்களே... கொடுத்தீர்களா? என்று தைரியத்தோடு கேளுங்கள்.
இரும்பு கோட்டை
நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தருகிறோம் என்று சொன்னீர்களே பெற்று தந்தீர்களா? என்று கேளுங்கள். பேனாவை பாக்கெட்டில் தான் வைக்க முடியும். கடலில் வைக்க முடியாது. கடலில் வைத்தால் எதிர்ப்போம். வேறு எங்கு வைத்தாலும் எதிர்ப்பு கிளம்பும். சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விலை உயர்வுகளால் தி.மு.க.வினரே கொந்தளிப்பில் உள்ளதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.
மக்களை பாதுகாக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு விரைவில் உதயமாகும். மக்கள் காவலனாக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார்.
ஈரோடு மாவட்டம் என்றைக்கும் அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.