தேயிலை ேதாட்டங்களில் கவாத்து பணி தீவிரம்


தேயிலை ேதாட்டங்களில் கவாத்து பணி தீவிரம்
x

கோத்தகிரி பகுதியில் தேயிலை ேதாட்டங்களில் கவாத்து பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் தேயிலை ேதாட்டங்களில் கவாத்து பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

விலை வீழ்ச்சி

நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயமே உள்ளது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக நீலகிரி தேயிலைத்தூளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு இருந்த நிலையில், கடந்த ஆண்டு மட்டும் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம் காரணமாக தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டதால், தேயிலைத்தூள் தேவை அதிகரித்து நீலகிரி தேயிலைத்தூளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கிலோ ரூ.10 முதல் ரூ.13 வரையிலான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த பச்சை தேயிலை, கடந்த சில மாதங்களாக அதிகபட்சமாக ரூ.30 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் மீண்டும் அசாம் மாநிலத்தில் தேயிலைத்தூள் உற்பத்தி தொடங்கியதால், நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை கொள்முதல் விலை சற்று வீழ்ச்சியடைந்தது. இந்த மாதத்தில் பச்சை தேயிலை விலை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 12 ரூபாய் 68 காசுகள் என்று இந்திய தேயிலை வாரியம் நிர்ணயித்துள்ளது. இருப்பினும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு கூலி, பராமரிப்பு செலவு ஆகியவற்றிற்கு அந்த கொள்முதல் விலை போதுமானதாக இல்லை. எனவே சிறு தேயிலை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

கவாத்து செய்யும் பணி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக போதுமான மழை பெய்துள்ளதால் தேயிலை தோட்டங்களில் கொழுந்துகள் நன்கு வளர்ந்து மகசூல் அதிகரித்து வருகிறது. ஆனால் தேயிலை பறிப்பதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அதிக பரப்பில் தேயிலை தோட்டம் வைத்துள்ள விவசாயிகள் மின்மோட்டார் மூலம் இயங்கும் அறுவடை எந்திரம் மற்றும் கை அறுவடை எந்திரங்கள் மூலமாக பச்சை தேயிலையை அறுவடை செய்து வருகின்றனர். மேலும் தற்போது பச்சை தேயிலைக்கு கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பச்சை தேயிலையை பறிக்காமல் விட்டு விட்டதால் அவை கரட்டு இலையாக மாறி உள்ளது. இதனால் செடிகள் பாதிக்காமல் இருக்க பெரும்பாலான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகளுக்கு அடி கவாத்து செய்யும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கவாத்து செய்து அகற்றிய இலைகளை, இயற்கை உரமாக பயன்படுத்துவதற்காக தேயிலை செடிகளின் வேர்ப்பகுதியில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர்.

மகசூல் அதிகரிப்பு

இதுகுறித்து தேயிலை விவசாயிகள் கூறியதாவது:-

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேயிலை செடிகளுக்கு அடிக்கவாத்து செய்வது மிகவும் சிறந்தது. பனிகாலங்களில் மேல் கவாத்தும் செய்வது சிறந்தது. தற்போது பச்சை தேயிலைக்கு கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தோட்டங்களில் கவாத்து செய்து வருகிறோம். ஒரு தேயிலை செடியை எந்திரம் மூலம் கவாத்து செய்ய 1 ரூபாய் 50 காசுகள் செலவாகிறது. கவாத்து பணி முடிந்தபிறகு தேயிலை தோட்டத்தை சுத்தம் செய்து தேயிலை செடிகளுக்கு அமோனியம் சல்பேட் மற்றும் யூரியா பேஸ் உரங்களை இட்டு, முறையாக பராமரித்து வந்தால், சில மாதங்கள் கழித்து தரமான தேயிலை கொழுந்துகள் வளர்வதுடன், தேயிலை மகசூலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story