அரசு பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்


அரசு பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 21 May 2023 6:45 PM GMT (Updated: 21 May 2023 6:45 PM GMT)

விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

விழுப்புரம்

விழுப்புரம்

விலையில்லா பாடப்புத்தகங்கள்

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற ஜூன் 5-ந் தேதியும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிக்கூடம் திறப்பதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள், குறிப்பேடுகள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில்...

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலத்தில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

1,512 பள்ளி கூடங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் 1,208 அரசு பள்ளிகள், 17 நகராட்சி பள்ளிகள், 65 அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், 199 நிதி உதவி பெறும் பள்ளிகள், 23 பகுதி நேர நிதி உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 1,512 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் தொடக்கப்பள்ளிகளில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 279 மாணவ, மாணவிகளும், நடுநிலைப்பள்ளிகளில் 77 ஆயிரத்து 975 மாணவ, மாணவிகளும், உயர்நிலைப்பள்ளிகளில் 52 ஆயிரத்து 219 மாணவ, மாணவிகளும், மேல்நிலைப்பள்ளிகளில் 45 ஆயிரத்து 296 மாணவ, மாணவிகள் என மொத்தம் 3 லட்சத்து 14 ஆயிரத்து 769 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

முதல்பருவ பாடப்புத்தகம்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த வட்டார மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். நாளைக்குள்(செவ்வாய்க்கிழமை) அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டு விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story