கல்லணைக்கால்வாயில் 13 இடங்களில் கட்டுமான பணிகள் தீவிரம்


கல்லணைக்கால்வாயில் 13 இடங்களில் கட்டுமான பணிகள் தீவிரம்
x

கல்லணைக்கால்வாயில் 13 இடங்களில் கட்டுமான பணிகள் தீவிரம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

மேட்டூர் அணையில் இருந்து நாளை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி தஞ்சை கல்லணைக்கால்வாயில் 13 இடங்களில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சையில் பாலம் கான்கிரீட் போடும் பணி நவீன எந்திரம் மூலம் நடைபெற்றது.

தமிழகத்தின் நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

வழக்கமான தேதியில் அணை திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா பரப்பளவு அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதை தொடர்ந்து மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணை நாளை திறப்பு

இந்த நிலையில் மேட்டூர் அணை டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு முன்கூட்டியே மே மாதத்தில் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. இதையடுத்து டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் 5.25 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பிரித்து விடப்படும். ஆனால் தற்போது ஆறு, பாசன வாய்க்கால், வடிகால் வாய்க்கால், கிளை வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

31-ந்தேதிக்குள் முடிக்க திட்டம்

இந்த பணிகள் அனைத்தும் வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர காவிரி ஆறு மற்றும் கல்லணைக்கால்வாய் போன்ற ஆறுகளில் பாலம் கட்டுமான பணி மற்றும் கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் கல்லணைக்கால்வாயில் மட்டும் 13 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை இர்வீன் பாலத்தில் பாலம் கட்டுமான பணி மற்றும் கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணிகள் என பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் விடப்பட்டால் 8 மாதங்கள் வரை தண்ணீர் செல்லும். மீதமுள்ள 4 மாதங்களில் தான் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

13 இடங்களில் பணிகள்

தற்போது ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும் என கணக்கில் கொள்ளப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் தற்போது முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுதால் இந்த பணிகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 13 இடங்களிலும் தற்போது பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த பணிகளை அனைத்தும் வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்கும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தஞ்சை இர்வீன் பாலத்தில் பாலம் கட்டுமான பணிக்கு இறுதிக்கட்டமாக கான்கிரீட் போடும் பணி நவீன எந்திரத்தை கொண்டு நேற்று போடப்பட்டது. முன்னதாக இந்த பாலப்பணிகள் நடைபெறுவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் ரேணுகோபால் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதே போல் தூர்வாரும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றன.


Next Story