இயற்கை உரத்திற்காக விளைநிலங்களில் ஆட்டுக்கிடை அமைக்கும் பணி தீவிரம்


இயற்கை உரத்திற்காக விளைநிலங்களில் ஆட்டுக்கிடை அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதியில் இயற்கை உரத்திற்காக விளைநிலங்களில் ஆட்டுக்கிடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் பகுதியில் இயற்கை உரத்திற்காக விளைநிலங்களில் ஆட்டுக்கிடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

ஆட்டுக்கிடை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல், வடகால், கடவாசல், திருக்கருகாவூர், பழைய பாளையம், மாதாணம், குன்னம், கீழ்மாத்தூர், ஓலையம்பத்தூர் ஆகிய பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த விளைநிலங்கள் அறுவடை முடிந்து தரிசாக உள்ளது. வானம் பார்த்த பூமியாக உள்ள இந்த பகுதியில் விவசாயிகள் மழை பொழிந்தால் மட்டுமே சாகுபடியை செய்ய முடியும்.

சாகுபடி பணிகள் நடைபெறாத காலகட்டத்தில் வயல்களில் புற்கள் முளைத்து வளரும். அப்போது வயல்களில் ஆடுகளை விவசாயிகள் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இதற்காக ஆடுகள் இரவு நேரங்களில் ஏதாவது ஒரு வயலில் தங்க வைக்கப்படுகிறது. இதற்கு ஆட்டுக் கிடை போடுவது என்று பெயர்.தமிழ்நாட்டில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஆட்டு கிடைபோடும் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இயற்கை உரம்

ஆடு இலை, தழைகளை அதிகமாக உண்பதால் அதனுடைய கழிவுகள் உடனடியாக உரமாக மாற்றப்பட்டு பலனளிக்கிறது. எனவேதான் ஆட்டுக்கிடை போடும் வழக்கம் அதிகமாக உள்ளது. மேலும் ஆட்டின் சிறுநீரானது களைச் செடிகள் முளைப்பதை தடைசெய்து விடுகிறது. தற்பொழுது கோடைகாலம் நிலவி வருவதால் தங்கள் விளைநிலங்களில் இயற்கை உரத்திற்காக ஆட்டுக்கிடை அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ஏராளமான ஆடுகள் மேய்ச்சலுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை விவசாயிகள் பயன்படுத்தி தங்கள் வயல்களில் ஆட்டுக்கிடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மண்வளம் அதிகரிக்கும்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது தற்பொழுது கொள்ளிடம் கடைமடை பகுதியான எங்கள் கிராமத்தில் நெற்பயிரைதவிர மாற்று பயிர் சாகுபடி செய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே வரும் ஆண்டு சம்பா சாகுபடிக்காக விளைநிலங்களில் ஆட்டுக்கிடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்பொழுது ராமநாதபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளை செம்பரி ஆடுகள் அதிகமாக வருவதால் அவற்றைப் பயன்படுத்தி வயலில் ஆட்டுக்கிடை அமைத்து வருகிறோம்.

ஆட்டுக்கிடை கட்டுவதன் மூலம் விளைநிலங்களின் ஆட்டு சாணம் மற்றும் கோமியம் விளைநிலங்களில் விழுவதால் மண்வளம் பாதுகாக்கப்பட்டு செழுமையாக காணப்படும், இதனால் ரசாயன உரங்களை பயன்படுத்த தேவையில்லை. மேலும் மண்ணுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும் இதனால் சம்பா சாகுபடி சிறப்பான விளைச்சலை அளிக்கும் என்ற நோக்கில் ஆட்டுக்கிடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்.


Next Story