ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு- பிளாஸ்டிக் பைகள், மதுபாட்டில்கள் பறிமுதல்
ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் கார்களில் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் பைகள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொள்ளாச்சி
ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் கார்களில் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் பைகள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வனவிலங்குகளுக்கு கடும் பாதிப்புகள்
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டத்தில், மானாம்பள்ளி, வால்பாறை, டாப்சிலிப், உலாந்தி ஆகிய 4 வனச்சரகங்கள் உள்ளன. ஆழியாறு அணை, வால்பாறை, டாப்சிலிப் செல்லும் சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக்கில் கட்டப்பட்ட உணவு பொட்டலங்கள், மதுபானங்கள் ஆகியவற்றை வனப்பகுதிகள் கொண்டு சென்று சாப்பிட்டுவிட்டு ஆங்காங்கே வீசி எறிந்துவிடுகின்றனர்.
இதனால், வனத்தில் சுற்றுசூழல் மிகவும் பாதிப்பு அடைவதுடன் வனப்பகுதியிலுள்ள மான்கள், காட்டு யானை, காட்டெருமை, கரடி, குரங்குகள் போன்ற வனவிலங்குகளுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுகிறது.
தீவிர கண்காணிப்பு
இதனை கட்டுப்படுத்தும் வகையில், ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடியில் வனத்துறையினர் வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து, மது பாட்டில்கள், உணவு பொட்டலங்கள், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக வனத்துறையினர் மஞ்சப்பை மற்றும் காகித கவர்களை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கிவருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆழியாறு, வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கார் மற்றும் சுற்றுலா வேன்களில் வந்த வண்ணம் இருந்தனர்.
இதனால் ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். காலை முதல் மதியம் வரை நடந்த சோதனையில் 20 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதனை கொண்டு வந்த சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டதோடு, அபராதம் விதிக்கப்பட்டது.