காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏ.டி.எம்.மையங்கள் தீவிர கண்காணிப்பு; பாதுகாப்பான முறையில் உள்ளதா? என போலீசார் சோதனை


காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏ.டி.எம்.மையங்கள் தீவிர கண்காணிப்பு; பாதுகாப்பான முறையில் உள்ளதா? என போலீசார் சோதனை
x

திருவண்ணாமலை ஏ.டி.எம்.கொள்ளை சம்பவத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏ.டி.எம். மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம்

ஏ.டி.எம்.களில் கொள்ளை சம்பவம்

காஞ்சீபுரத்தின் அண்டை மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து தொடர்ந்து 4 ஏ.டி.எம்.களில் மர்மநபர்கள் ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பெயரில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் தடுப்புகள் வைத்து கண்காணித்தல், பஸ் நிலையங்களின் அருகே விடுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாரேனும் தங்கி உள்ளனரா? என ரோந்து பணியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு

இந்த நிலையில் காஞ்சீபுரம் நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மேற்பார்வையில், போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஏ.டி.எம்.மையங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்குகிறதா? ஏ.டி.எம். எந்திரம் பாதுகாப்பான முறையில் உள்ளதா? காவலாளிகள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும், அங்கு பணியில் உள்ள காவலாளிகளிடம் ஏ.டி.எம்.மையத்திற்கு பணம் எடுக்க வருபவர்களில் சந்தேகத்திற்கிடமாக யாராவது வந்தாலோ, அடிக்கடி ஒரே நபர் நோட்டம் விட்ட படி அப்பகுதியில் சுற்றித்திரிந்தாலோ உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். இதேபோல் அந்தந்த போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story