அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை
சுதந்திர தின விழாவையொட்டி அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெறவுள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன், செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் ரெயில்நிலையத்திற்கு வரும் வாகனங்கள், பயணிகளின் உடமைகளை சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்திற்குள் அனுமதித்தனர்.
தொடர்ந்து, பயணிகள் ஓய்வு அறை, பார்சல் அலுவலகம், நடைமேடை மற்றும் அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பெட்டிகளிலும் பயணிகளிடம் சோதனை செய்தனர். மேலும், ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாரும் தண்டவாளங்களில் ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கிறதா? என மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.