பள்ளிக்கூடங்களில் இடைத்தேர்வு இன்று தொடக்கம்
நெல்லை மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களில் இடைத்தேர்வு இன்று தொடங்குகிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான முதல் இடைத்தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வு வருகிற 7-ந் தேதி வரை நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
8, 10, 12-ம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் பகல் 11 மணி வரையும் மற்றும் மதியம் 1:30 மணி முதல் 3 மணி வரை இரண்டு வேளையும் வெவ்வேறு தேர்வுகள் நடைபெறும்.
9, 11-ம் வகுப்புகளுக்கு காலை 11.15 மணி முதல் 12.45 மணி வரையும் மற்றும் மாலை 3.15 மணி முதல் 4.45 மணி வரை இரண்டு வேளையும் வெவ்வேறு தேர்வுகள் நடைபெறும். தேர்வுகளை அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடத்த வேண்டும். எதிர்பாராத விடுமுறை ஏற்பட்டால் அந்த நாளுக்குரிய தேர்வு பின்னர் தள்ளி வைக்கப்படும். தேர்வு ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு செய்துள்ளார்.