சர்வதேச உணவு பாதுகாப்பு தினம்: ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


சர்வதேச உணவு பாதுகாப்பு தினம்: ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x

சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

சென்னை,

சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சென்னை எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாநகர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கேண்டீனிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. துறையின் நியமன அதிகாரி பி.சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் என்.ராஜா, ஜெயகோபால், கண்ணன் உள்ளடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுகள் தரமானதாக உள்ளதா? செயற்கை நிறமூட்டிகள் எதுவும் சேர்க்கப்பட்டிருக்கிறதா? உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கலப்படத்தை கண்டறிவது எப்படி?

அதன்பின்னர் ஓட்டல் ஊழியர்களுக்கு சந்தைகளில் இருந்து கொண்டுவரும் பொருட்களில் கலப்படத்தை கண்டறிவது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். டீத்தூளில் கலந்து வரும் மரத்தூள், மிளகில் கலந்து வரும் பப்பாளி விதை, தேனில் சேர்க்கப்படும் வெல்லப்பாகு, என கலப்படத்தை கண்டறிவது குறித்து செயல்முறை விளக்கமும் காண்பிக்கப்பட்டது.

மேலும், பயன்படுத்திய எண்ணெயை அரசின் வழிகாட்டு நடைமுறைகளின்படி பயோ டீசல் பயன்பாட்டுக்கு அளிக்கும் நடைமுறை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தியாவில் முதலிடம்

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

உணவுகள் செயற்கை நிறம் சேர்ப்பது தவறு. உணவில் தரம் இல்லாமை மற்றும் கலப்பட பொருட்கள் விற்பனை தொடர்பான புகார்களை 9444042322 என்ற எண்ணில் பொதுமக்கள் அளிக்கலாம். புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நடத்திய 2021-22-ம் ஆண்டுக்கான செயல்பாட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் தேர்வாகி இருக்கிறது. அதேபோல தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், மதுரை, சேலம், கோவை, நெல்லை, ஈரோடு, தூத்துக்குடி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்கள் சிறந்த செயல்பாட்டுக்கான விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story