மதுரவாயல் அருகே சினிமா பைனான்சியர் கொலை வழக்கில் போலீஸ்காரரிடம் விசாரணை


மதுரவாயல் அருகே சினிமா பைனான்சியர் கொலை வழக்கில் போலீஸ்காரரிடம் விசாரணை
x

மதுரவாயல் அருகே சினிமா பைனான்சியர் கொலை வழக்கில் போலீஸ்காரர் ஒருவர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்..

சென்னை

சென்னை மதுரவாயல் அடுத்த நொளம்பூரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் என்ற சோட்டா வெங்கட் (வயது 48). சினிமா படங்களுக்கு பைனான்ஸ் விடுவது மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

இவர், தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக மற்றொரு சினிமா பைனான்சியரான பாபுஜி (58) என்பவரை தனது வீட்டின் மாடியில் வைத்து சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு, அவரது உடலை மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ வைத்து எரித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வெங்கட்ராமன், மற்றும் துணை நடிகர் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த வழக்கில் மதுரவாயலை சேர்ந்த போலீஸ்காரர் அமல்ராஜ் (44) சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் பணி புரிந்து வரும் அவர், கைதான சோட்டா வெங்கட்டின் நண்பர் ஆவார். அவரது வீட்டுக்கு சென்ற போதுதான் பாபுஜியை அவரது வீட்டில் வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். ஆனால் அதனை போலீஸ்காரர் அமல்ராஜ் கண்டும் காணாததுபோல் இருந்துள்ளார்.

பின்னர் பாபுஜியை கொலை செய்து விட்டு எரிப்பதற்காக உடலை எடுத்துச்சென்றபோது போலீஸ்காரர் அமல்ராஜ் உடன் இருந்ததும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. ஆனால் போலீஸ்காரராக இருந்து கொண்டு இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து கோயம்பேடு போலீசார் அமல்ராஜை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், கைது செய்யவும் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story