நாமக்கல்லில் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு தொடங்கியது
கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 181 விற்பனையாளர்கள், 19 கட்டுனர் பணியிடங்களை நிரப்ப, ஆள் சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் மொத்தம் சுமார் 8 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர்.
இவர்களில் விற்பனையாளர் பணியிடத்துக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு நேற்று நேர்முக தேர்வு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் தொடங்கியது. மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் செல்வகுமரன் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய 16 குழுவினர் சான்றிதழ்களை சரிபார்த்து நேர்காணல் செய்தனர். தினசரி 800 பேர் வீதம் வருகிற 27-ந் தேதி வரை இந்த நேர்முகத்தேர்வு நடைபெற இருப்பதாகவும், கட்டுநர் பணிக்கான நேர்முக தேர்வு வருகிற 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடைபெற இருப்பதாகவும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி நேர்முகத்தேர்வு நடைபெற்ற பள்ளி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.