கிராம உதவியாளர் பணிகளுக்கு நேர்முகத்தேர்வு
திருவாரூரில் கிராம உதவியாளர் பணிகளுக்கு நேர்முகத்தேர்வு நடந்தது. இந்த பணிக்கு 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்ற நிலையில் என்ஜினீயரிங் படித்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூரில் கிராம உதவியாளர் பணிகளுக்கு நேர்முகத்தேர்வு நடந்தது. இந்த பணிக்கு 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்ற நிலையில் என்ஜினீயரிங் படித்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிராம உதவியாளர் பணி
திருவாரூர் மாவட்டத்தில் 167 கிராம உதவியாளர் பணிகளுக்கு 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் 5,312 பேர் கிராம உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பித்தனர். இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 5,312 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.
நேர்முகத்தேர்வு
இந்த நிலையில் கிராம உதவியாளர் பணிகளுக்கான நேர்முகத்தேர்வு நேற்று முதல் தொடங்கி வருகிற 10-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 8 தாசில்தார் அலுவலகங்களில் நேற்று காலை முதல் கிராம உதவியாளர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு தொடங்கியது.
என்ஜினீயரிங் படித்தவர்களும் பங்கேற்பு
திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நேர்முக தேர்வில் ஏராளமான இளைஞர்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து கலந்து கொண்டனர்.
குறிப்பாக இந்த பணிக்கு 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்ற நிலையில் என்ஜினீயரிங் படித்தவர்கள், முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர்.
சைக்கிள் ஓட்டினர்
இந்த தேர்வில் கலந்து கொண்டவர்கள் சைக்கிள் ஓட்டி காண்பித்தும், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை படித்து காண்பிக்க வேண்டும்.மேலும் சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு 10 குழுக்களாக பிரிந்து தாசில்தார் நக்கீரன் தலைமையில் நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது.