விழுப்புரத்தில் கந்துவட்டி கேட்டு ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு மிரட்டல்


விழுப்புரத்தில் கந்துவட்டி கேட்டு ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு மிரட்டல்
x

விழுப்புரத்தில் கந்துவட்டி கேட்டு ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு மிரட்டல் விடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுக்கப்பட்டது.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே உள்ள அய்யங்கோவில்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 35). ஆட்டோ டிரைவரான இவர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2017-ம் ஆண்டு அய்யங்கோவில்பட்டு கிராமத்தை சேர்ந்த 3 பேரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை கடனாக வாங்கினேன். இதற்கு 2 பிரம்மச்சாரி பத்திரங்களை அவர்களிடம் வழங்கியுள்ளேன். அதன் பிறகு சிறுக, சிறுக நான் பெற்ற கடன் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.3 லட்சத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு நான் கொடுத்த பத்திரங்களை திருப்பித்தரும்படி கேட்டேன். அதற்கு மேலும் ரூ.3 லட்சம் தர வேண்டும் என்றும் பணம் கொடுத்தால்தான் பத்திரங்களை திருப்பித்தர முடியும் என்று அவர்கள் 3 பேரும் கூறிவிட்டனர். இதுபோன்று கந்துவட்டி கேட்டு மிரட்டினால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்வேன் என்று கூறியதற்கு பணம் தராவிட்டால் என்னையும், எனது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். மேலும் நேற்று முன்தினம் அவர்கள், என்னையும், எனது மனைவி அம்சாவையும் கத்தியால் வெட்ட முயன்றனர். அவர்களை நாங்கள் தடுத்தபோது எங்களுடைய பெட்டிக்கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதோடு எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார்.


Next Story