ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்க செல்போன் செயலி அறிமுகம்

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்க செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களது தவணை தொகையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கினை இணைத்தல், ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைத்தல், நேரடி பண பரிவர்த்தனை, நில ஆவணங்களை இணைத்தல் போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 747 விவசாயிகளின் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கபடாமல் உள்ளனர். 15 ஆயிரத்து 780 நபர்கள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்காமலும் உள்ளனர்.
இந்த நிலையில் விவசாயிகள் ஆதார் எண்ணுடன் செல்போன் என்னை இணைக்க மத்திய அரசால் PM - Kisan GOI என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து தாங்களாகவே ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இ-சேவை மையம் மற்றும் தபால் நிலையங்களுக்குச் சென்று இப்பணியினை மேற்கொள்ளலாம்.
3 ஆயிரத்து 751 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணைக்காமல் உள்ளார்கள்.
இப்பணியினை முடித்திட தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகவும். மேற்படி அனைத்து பணிகளையும் வருகிற 30-ந் தேதிக்குள் முடித்தால் மட்டுமே பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி தொடர்ந்து தங்கள் கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் தெரிவித்துள்ளார்.






