ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளைஅகற்ற வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
முந்திரி கன்று
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய சங்கத்தினர், விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில், "பசும் பால் லிட்டருக்கு ரூ.45 கொள்முதல் விலை அறிவிக்க வேண்டும்.
ஆவின் மூலம் மாட்டுத்தீவனம் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கரும்பு டன்னிற்கு ரூ.4 ஆயிரமும், நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500-ம் வழங்க வேண்டும். ஏரி, குளங்களில் வட கிழக்கு பருவ மழை தண்ணீரை சேமித்து வைக்க வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டும். அறந்தாங்கி, ஆலங்குடி, இலுப்பூர், மணமேல்குடி, ஆவுடையார்கோவில், திருமயம் போன்ற தாலுகாவில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கந்தர்வகோட்டை, அரந்தாங்கி தாலுகாக்களில் விவசாயிகளுக்கு தரமான முந்திரி கன்று வழங்க வேண்டும். நிலமெடுப்பு சட்டத்தை கைவிட வேண்டும்'' என்றார்.
ஆக்கிரமிப்பு அகற்றுதல்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் மிசா மாரிமுத்து பேசுகையில், "மாவட்டத்தில் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அடுத்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுப்பணித்துறை, ஊராட்சிகளில் உள்ள குளங்களில் நீர் மட்டம் எவ்வளவு உள்ளது, நீர் நிலைகளை பாதுகாக்க, மேம்படுத்த திட்டத்தை பற்றி தெரிவிக்க வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். தைல மரக்காடுகள், கருவேல மரங்களை அழிக்க வேண்டும்'' என்றார்.
தென்னை விவசாயிகள் சங்க தலைவர் செல்லத்துரை பேசுகையில், "தேங்காய் விலை வீழ்ச்சியடைந்து விட்டது. தென்னை விவசாயம் தொடர்பாக சரியான புள்ளி விவரங்களை சேகரித்து அரசுக்கு வழங்க வேண்டும். புதுக்கோட்டை பலாப்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தைலமரக்காட்டில் வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்'' என்றார்.
பயிர் காப்பீடு
கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ் பேசுகையில், "மானிய விலையில் விதை நெல் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் பயிர்க்கடன் காலத்தோடு வழங்க வேண்டும். கடந்த ஆண்டில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும்'' என்றார். இதேபோல விவசாயிகள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர்.
கூட்டத்தில் கலெக்டர் பதில் அளித்து பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னதாக, கூட்டுறவு கடன் சங்கம் கொள்முதல் செய்துள்ள ரூ.54.80 லட்சம் மதிப்பிலான 2 கதிர் அறுவடை எந்திரங்களை அவர் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் தனலெட்சுமி உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.