கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக பெண் புகார்: சூப்பிரண்டு உத்தரவுபடி போலீசார் தீவிர விசாரணை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த 34 வயது பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் ஒரு கட்டிட மேஸ்திரி என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அதை எனக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்து, லட்சக்கணக்கில் பணம் பறித்தார். அவருடன் மேலும் 2 கட்டிட மேஸ்திரிகள் சேர்ந்து என்னை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்தனர். இதற்கு உடந்தையாக அவர்களுடைய நண்பர் ஒருவர் செயல்பட்டார். இது தொடர்பாக பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். இதனால் 4 பேரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பென்னாகரம் போலீசார் இந்த புகார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.