பட்டாசு குடோன் விபத்து:சிலிண்டர் விற்பனை முகவர்களிடம்போலீசார் விசாரணை


பட்டாசு குடோன் விபத்து:சிலிண்டர் விற்பனை முகவர்களிடம்போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Aug 2023 1:00 AM IST (Updated: 4 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

பட்டாசு குடோன் விபத்து தொடர்பாக சிலிண்டர் விற்பனை முகவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சிலிண்டர் முகவர்களிடம் விசாரணை

கிருஷ்ணகிரி பழையபேட்டை பட்டாசு குடோன் விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. சிலிண்டர் வெடித்து விபத்து நடந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில் பின்னர் சிலிண்டர் எதுவும் வெடிக்கவில்லை என்றும், அதற்கான ஆதாரங்களும் இல்லை என்றும் அங்கு கடை நடத்தி வந்தவர்கள் கூறினார்கள். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சிலிண்டர் விற்பனை செய்யக்கூடிய முகவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பழையபேட்டையில் குறிப்பிட்ட ஓட்டல் மற்றும் கடைகள் உள்ள பகுதிகளுக்கு சிலிண்டர் எதுவும் விற்பனை செய்தீர்களா? என போலீசார் கேட்டனர். அப்போது சிலிண்டர் விற்பனை முகவர்கள் தாங்கள் அந்த பகுதியில் உள்ள முகவரிக்கு சிலிண்டர்கள் விற்பனை செய்யவில்லை என்றும், சிலிண்டர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து சிலிண்டர் விற்பனை முகவர்கள் கூறியதாவது:-

அறிகுறிகள் இல்லை

சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறுவது தவறு. அந்த இடத்தில் சிலிண்டர் வெடித்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. சிலிண்டர் வெடித்து சிதறிய பாகங்கள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை. பொதுவாக கியாஸ் கசிவு ஏற்பட்டால் அந்த அறை முழுவதும் கியாஸ் பரவி இருக்கும். பின்னர் `சுவிட்ச் ஆன்' செய்தாலோ, அடுப்பை பற்ற வைத்தாலோ தான் விபத்து ஏற்படும். அது போன்ற விபத்துகளிலும் அந்த குறிப்பிட்ட இடத்திற்குள் தான் நடைபெறுமே தவிர, பக்கத்து கட்டிடங்கள் தரைமட்டம் ஆகாது. மேலும் சிலிண்டர்கள் வெடிக்காது. மேலும் உடல்கள் பல அடி தூரத்திற்கு சிதறி செல்லாது. எனவே சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நடந்தது என்று கூறுவது தவறு. இதுதொடர்பாக நாங்கள் போலீசாரிடம் தெளிவாக கூறி விட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story