கொல்லிமலையில் இருந்து தார்ப்பாய் மூடி லாரிகளில் மரங்கள் கடத்தல்? - மாவட்ட வன அலுவலர் விசாரணை
கொல்லிமலையில் இருந்து தார்ப்பாய் மூடி லாரிகளில் மரங்கள் கடத்தப்படுகிறதா? என மாவட்ட வன அலுவலர் விசாரணை நடத்தினர்.
சேந்தமங்கலம்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள பட்டா நிலங்களில் சில்வர் ஓக், பலா, நாவல் போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அவைகளில் முதிர்ச்சியின் போது வெட்டி பிற இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு வன அதிகாரி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து குறிப்பிட்ட மரங்களை மட்டும் வெட்டி கொள்ள மாவட்ட கலெக்டரிடம் உரிமையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு அனுமதி கிடைத்ததும் அந்த மரங்களை அங்கிருந்து கொண்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பாக தின்னனூர் நாடு, சேலூர் நாடு போன்ற பல பகுதிகளிலிருந்து சில லாரிகளில் சில்வர் ஓக் மற்றும் பிற மரங்கள் வெட்டி வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்கு வந்த லாரிகளில் தார்ப்பாய் மூடப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை அறிந்த மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் சம்பந்தப்பட்ட வன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடிக்கு முன்பாக அந்த லாரிகள் நிறுத்தப்பட்டு தார்ப்பாய் போடப்பட்டு மூடப்பட்டதாகவும், அதை தொடர்ந்து அங்கிருந்து அந்த லாரிகள் ஒவ்வொன்றாக பின் சென்றது என்றும் அந்த லாரிகளுக்கு பின்னால் வருகின்ற இருசக்கர வாகனங்களின் பாதுகாப்பு கருதி தார்ப்பாய் போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் சோதனை சாவடி பதிவு புத்தகத்தில் அந்த லாரிகளின் விவரம் குறித்து பதிவு செய்யப்பட்ட பிறகு தான் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தனர்.