இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை


இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை
x

திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்து கிடந்ததை படத்தில் காணலாம் (கோப்பு படம்).

பிரகதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்த விபத்தில் 3 மாதங்களுக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர்.

புதுக்கோட்டை

தேர் கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குடவரை கோவில்களில் ஒன்று திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் கோவில் ஆகும். இக்கோவிலில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி ஆடிப்பூர தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்தது. இதில் 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி அரிமளத்தை சேர்ந்த ராஜகுமாரி (வயது 64) பரிதாபமாக இறந்தார். தேர் விபத்து தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விபத்து தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையிலான குழு விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார்.

பக்தர்கள் குற்றச்சாட்டு

இதற்கிடையில் தேர் விபத்து தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தேரின் சக்கரத்தில் கட்டை போடுவதில் தவறுதலாக கட்டை போட்டதால் விபத்து ஏற்பட்டதாக அப்பணியில் ஈடுபட்ட ராஜேந்திரன், வைரவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தேர் கவிழ காரணம் அதிகாரிகள் சரியான முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும், தேரில் சக்கரங்களோடு இணைக்கும் பகுதியில் சரியாக இணைக்கப்படவில்லை எனவும், தேரோட்டத்திற்கு முன்பு பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை எனவும் பக்தர்கள் தரப்பில் குற்றம்சாட்டினர்.

தேர் விபத்து அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோவில் மேற்பார்வையாளராக இருந்த மாரிமுத்து அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.

அதிகாரிகள் விசாரணை

இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு பிரகதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் தலைமையிடத்து நகை சரிபார்ப்பு இணை ஆணையர், என்ஜினீயரிங் மேற்பார்வையாளர் குழுவினர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் புதுக்கோட்டை வந்தனர். அவர்கள் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி விட்டு சென்னை சென்றனர்.

இதில் தேர் கவிழ்ந்த போது காயமடைந்தவர்களில் 2 பேர், கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி, மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் என்ஜினீயர்கள், தேர் சக்கரங்களுக்கு கட்டை போட்ட ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட தேரை பார்வையிட்டனர்.

22 தேர்கள்

இந்த சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வட்டாரத்தில் கேட்டபோது, ''சம்பந்தப்பட்டவர்களிடம் அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி சென்றுள்ளனர். தேர் சக்கரங்கள் இரும்பினால் செய்யப்பட்டதில் பெல் என்ஜினீயர்களும் வந்து தங்களது தரப்பு விவரத்தை தெரிவித்தனர். தேவஸ்தானத்திற்குட்பட்ட கோவில்களில் 22 தேர்கள் இதே போன்று அமைப்பை கொண்டதாக உள்ளன. இந்த தேர்களை சரி செய்ய அறிவுறுத்தியிருக்கின்றனர்'' என்றனர்.

இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு இந்த விசாரணை நடைபெறுவது பக்தர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது. வெறும் கண்துடைப்புக்காக இந்த விசாரணை நடந்ததாக கோவில் வட்டாரத்தில் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த விசாரணையில் உரிய நடவடிக்கையை அதிகாரிகள் குழுவினர் எடுப்பார்கள் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.


Next Story