கிணத்துக்கடவு பகுதியில் சோதனை:புகையிலை பொருட்கள் விற்ற 11 கடைகளுக்கு அபராதம்-சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
கிணத்துக்கடவு பகுதிகளில் நடத்திய சோதனையில் புகையிலை பொருட்கள் விற்ற 11 கடைகளுக்கு அபராதம் விதித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதிகளில் நடத்திய சோதனையில் புகையிலை பொருட்கள் விற்ற 11 கடைகளுக்கு அபராதம் விதித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதிகாரிகள் சோதனை
கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம், காரச்சேரி, பனப்பட்டி ஆகிய பகுதியில் பள்ளி, கோவில் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் பீடி, தடைசெய்யப்பட்ட சிகரெட், குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ராவுக்கு புகார் வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்த சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சுகாதார மேற்பார்வையாளர் ராஜவேல், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், இன்பரசன், ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் அரசம்பாளையம், காரச்சேரி, பனப்பட்டி பகுதியில் கோவில் அருகில் பெட்டி கடைகள், பேக்கரிகள், பள்ளி அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் அதிரடியாக சோதனை மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
11 கடைகளுக்கு அபராதம்
அப்போது பள்ளி, கோவில் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் பீடி, தடைசெய்யப்பட்ட சிகரெட், குட்கா புகையிலை பாக்கெட் விற்பனை செய்வதாகவும், கடைகள் முன்பு புகைபிடிக்க அனுமதி அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுகாதாரத்துறையினர் அதிரடியாக கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். அதன்படி 11 கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் 6 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து சென்றனர்.