அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் குறித்து விசாரணை
குளித்தலை அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசப்பட்டது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிநீர் தொட்டியில் அசுத்தம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வை.புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை தனி கட்டிடங்களிலும், 6-ம் முதல் 8-ம் வரை உள்ள வகுப்புகள் அதே ஊரில் மற்றொரு இடத்தில் உள்ள பள்ளி கட்டிடத்திலும் நடைபெற்று வருகிறது. 6-ம் முதல் 8-ம் வரை உள்ள வகுப்புகள் இருக்கும் பள்ளி கட்டிடத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கை, கால்களை சுத்தம் செய்வதற்கும், தங்களது உணவு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கும் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை நேற்று மாணவ, மாணவிகள் பயன்படுத்த முற்பட்டபோது துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.
போலீசார் பார்வையிட்டனர்
இதையடுத்து அந்த தண்ணீர் தொட்டி தூய்மை செய்யப்பட்டதாம். அந்த தண்ணீர் தொட்டியில் இயற்கை உபாதை கழிக்கப்பட்டதாக வதந்தி பரவியுள்ளது. இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது அந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் உள்ளதா இல்லையா என்பதை தினசரி தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்து தண்ணீர் நிரப்புவது வழக்கம். சில நாட்களாக அந்த தண்ணீர் தொட்டியை பயன்படுத்துவதில்லை என்றும், நேற்று அந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக திறந்து பார்த்த பொழுது அந்த தண்ணீர் தொட்டியில் சிறிய அளவிலான துணிகள் இருந்ததாம். இதைடுத்து அந்த துணியை அப்புறப்படுத்தி விட்டதாகவும், அந்த தண்ணீரில் வேறு எந்த ஒரு துர்நாற்றத்தை ஏற்படுத்தும் செயலும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளனர். அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் தண்ணீர் தொட்டியில் துணியை தவிர வேறொன்றும் இல்லை என்றும் சிறப்பான முறையில் நடந்துவரும் இப்பள்ளி தொடர்பான பொய்யான வதந்தி பரவியதாக தெரிவித்தனர். இதுகுறித்து தனிப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் நேரடியாக பள்ளிக்குச் சென்று பார்வையிட்டனர்.
பரபரப்பு
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணனிடம் கேட்ட பொழுது அந்தப் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் ஏதேனும் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவகையில் ஏதேனும் கலந்திருந்ததா உண்மை நிலை என்ன என்பது குறித்து நேரடியாக விசாரணை நடத்த கல்வித்துறை சார்ந்த அலுவலரை அப்பள்ளிக்கு அனுப்பி உரிய விளக்கம் கேட்க உள்ளதாக தெரிவித்தார். அதுபோல அப்பள்ளிக்குச் சென்ற அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரும் விசாரணை செய்து அது தொடர்பான அறிக்கையை வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.