ஊழல் வழக்கில் சிக்கியுள்ளதிமுகஅமைச்சர்களை காப்பாற்ற நினைக்காதீர்கள்லஞ்ச ஒழிப்புத்துறை மீது சிவிசண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள தி.மு.க. அமைச்சர்களை காப்பாற்ற நினைக்காதீர்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை மீது சி.வி.சண்முகம் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று சி.வி.சண்முகம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. பொறுப்பேற்ற பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை தன்னிச்சையாக செயல்படாமல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு பொய்யான வழக்குகளை பதிவு செய்து வருகிறது. ஆனால் ஆளும் தி.மு.க.வின் 13 அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் 10, 15 ஆண்டுகளாக அவ்வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. அந்த வழக்குகளை விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டாமல் அவ்வழக்குகளை நீதிமன்றத்தின் மூலம் நீர்த்துபோக செய்கிற பணியில் லஞ்ச ஒழிப்புத்துறை ஈடுபட்டிருக்கிறது. இவ்வாறு சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்றைக்கு தி.மு.க.வின் ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றம் செல்வோம்
தமிழகத்தில் தற்போது சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவார். எங்கள் ஆட்சியின் கீழ்தான் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படும். இதே அதிகாரிகள்தான் பணியாற்றுவார்கள். ஆகவே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தி.மு.க. அமைச்சர்களை காப்பாற்ற நினைக்காதீர்கள். உச்சநீதிமன்றம் வரை சென்று சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம்.
அதுபோல் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கடுமையாக எச்சரிக்கை செய்கிறோம்.
வாரிசு அரசியல்
என் உயிர்மூச்சு உள்ளவரை அ.தி.மு.க.விற்காக பாடுபடுவேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு எங்களையெல்லாம் கட்டி காப்பாற்றிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
கருணாநிதிக்கு பிறகு அந்த கட்சியில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் இவர்கள் எல்லாம் இல்லையா? அவர்களுக்கு தகுதி, திறமை இல்லையா? மு.க.ஸ்டாலினுக்கு மட்டும்தான் திறமை இருக்கிறதா? இவருக்கு பிறகு தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். இதுதான் வாரிசு அரசியல். என்னைப்பற்றி பேசினால்தான் பொன்முடிக்கு பதவி இருக்கும் என்று ஏதேதோ பேசி வருகிறார். என்னைப்பற்றி பேசுவதற்கு பொன்முடிக்கு எந்த தகுதியும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், நகர செயலாளர் ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, எசாலம் பன்னீர், ராஜா, நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செங்குட்டுவன், நகரமன்ற கவுன்சிலர்கள் கோல்டுசேகர், கோதண்டராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.