வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் முறைகேடு


வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் முறைகேடு
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கலெக்டரிடம் கிராமமக்கள் புகார் அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் அருகே கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஷ்ரவன்குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் கொட்டையூர் கிராமத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் தயார் செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட களப்பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பட்டியலில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை-எளிய மக்களின் பெயர்கள் இடம்பெற வில்லை. மாறாக வசதி படைத்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மேலும் முறைகேடாக தயார் செய்யப்பட்ட பட்டியலை உயர் அதிகாரிகள் கள ஆய்வு செய்யாமல் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் உண்மையான வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை

இதை தவிர்க்க அதிகாரிகள் கொட்டையூரில் கள ஆய்வு செய்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வசதிபடைத்தவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, உண்மையான ஏழை-எளிய மக்களை அதில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முறைகேடாக பட்டியல் தயார் செய்தவர்கள் மற்றும் அதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story