500 மதுக்கடைகளை மூடியது மகிழ்ச்சி தருகிறதா?


500 மதுக்கடைகளை மூடியது மகிழ்ச்சி தருகிறதா?
x

தமிழ்நாடு சட்டசபையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக்கோரிக்கையின் போது ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகே உள்ள மதுபானக்கடைகள் மூடப்படும் என்பதே அந்த அறிவிப்பு ஆகும்.

பெரம்பலூர்

500 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 332 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருக்கின்றன. அதில் மூடுவதற்காக 500 கடைகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த 500 கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டு விட்டன.

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 89 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை எதிரே பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடை, பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் தனியார் பள்ளி அருகே இருந்த டாஸ்மாக் கடை மற்றும் அதே சாலையில் உள்ள டாஸ்மாக் கடை, பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உப்போடையில் தனியார் பள்ளி அருகேயுள்ள டாஸ்மாக் கடை என மொத்தம் 4 டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன.

இதனை அறியாத மது பிரியர்கள் அந்த டாஸ்மாக் கடை முன்பு எப்போது கடை திறக்கும் என்று காத்திருந்ததை காணமுடிந்தது. பின்னர் அவர்கள் தகவல் தெரிந்து அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்கள் வாங்கி சென்றனர்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

தவறான முடிவு

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தை சேர்ந்த மது பிரியர் முத்து:- தமிழக அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடியது தவறான முடிவு. இதனை மது பிரியர்கள் வரவேற்க மாட்டார்கள். இதனால் மற்ற டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்க மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். பெரம்பலூரில் புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை எதிரே உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளதால் நான் மது குடிக்க சாலையை சிரமத்துடன் கடந்து புதிய பஸ் நிலையத்தில் உள்ளே உள்ள டாஸ்மாக் கடைக்கு வர வேண்டியிருக்கிறது. மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும்.

புதிய தொழில்களை தொடங்க வேண்டும்

பூலாம்பாடியை சேர்ந்த அருண்:- தமிழக அரசு 500 மதுபான கடைகளை மூடி இருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் மதுபான கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதால் எந்த பலனும் இல்லை. ஏனென்றால் மது பிரியர்கள் ஒரு கடையை மூடிவிட்டால் குடியை நிறுத்தி விடப்போவதில்லை. அருகே சில கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று அங்குள்ள கடையை தேடி சென்று மதுபானங்களை வாங்கி குடிக்கத்தான் செய்வார்கள். எனவே தமிழ்நாடு அரசு புதிய தொழில்களை தொடங்கி அதன் மூலம் வருவாயை பெருக்கி ஈடு கட்ட வேண்டும். மதுபானம் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். அதாவது தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் மது கிடைக்காது என்ற நிலை வந்தால் மது குடிப்பவர்கள் வேறு இடங்களுக்கு தேடி செல்ல போவதில்லை. அதற்கு பலன் கிடைக்கும். பொதுமக்களும், பெண்களும் நிம்மதி அடைவார்கள்.

பூரண மது விலக்கு

பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பழ வியாபாரி ஜெயலட்சுமி:- மதுவினால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. உழைக்கும் ஆண்களில் சிலர் மது குடிக்க அதிகம் செலவு செய்கின்றனர். இதனால் அவர்களால் குடும்பத்தை சரியாக நடத்த முடியவில்லை. நேற்று மட்டும் தமிழகத்தில் மொத்தம் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது சரியான முடிவு. தமிழக அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக வேறோரு இடத்தில் புதியதாக கடைகளை திறக்கக்கூடாது. படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து, சாராயத்தையும் முற்றிலும் ஒழித்து தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.

பணியாளர்கள் சங்கம் வரவேற்பு

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) பொதுச்செயலாளர் த.தனசேகரன்:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்தப்படி 500 மதுபானக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளதை டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் வரவேற்கிறோம். அதேநேரம் மூடப்படும் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களை மூடப்படும் கடைகளுக்கு அருகே உள்ள கடைகளில் பணியாற்ற உடனடியாக உத்தரவு வழங்க வேண்டும். அதுபோல் கடந்த ஆட்சிக்காலத்தில் காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கடைகள் செயல்பட்டன. இதனால் கணக்குகளை முடித்து கொண்டு பணியாளர்கள் வீடுகளுக்கு செல்லும் போது இரவு 10 மணி ஆகிவிடுகிறது. ஆனால் தற்போது பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கடைகள் செயல்படுகின்றன். இதனால் தற்போது பணியாளர்கள் கணக்குகளை முடித்து கொண்டு வீடுகளுக்கு நள்ளிரவில்தான் செல்கின்றனர். இதனால் சமூக விரோத கும்பல்களிடம் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். எனவே மதுபான கடைகள் செயல்படும் நேரத்தையும் பணியாளர்கள் நலன் கருதி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தினம் ரூ.10 கோடி இழப்பு

டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் எஸ்.விசாகன்:- தமிழகத்தில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளில் உள்ள தளவாட சாமான்கள், ரசீது எந்திரங்கள், விற்பனை முனைய எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கைகள் எந்த சிரமமும் இல்லாமல் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் தினமும் ரூ.10 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மதுகுடிப்பதால் பாதிக்கப்பட்டு 25 கோடி பேர் இறப்பார்கள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, தேசிய போதை மருந்து தடுப்பு சிகிச்சை மையம், சண்டிகர் உயர் மருத்துவ கல்வி மையம், சமுதாய மருத்துவ துறை, பொது சுகாதார கல்வி மையம் ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டன. இந்த ஆய்வில், 2011-ல் இருந்து 2050-ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட ஆண்டுகளில் இந்திய அளவில் மது குடிப்பதால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 25 கோடியே 80 லட்சமாக உயரும். இதனால் ஒவ்வொரு ஆண்டிலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.45 சதவீதம் இழப்பு உண்டாகும் எனக் கூறப்பட்டு உள்ளது. தற்பொழுது உள்ள சூழலில் மதுவால் 5 கோடியே 70 லட்சம் பேர் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு முறையான சிகிச்சை தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மது பழக்கம் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் மது ஒழிப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டால் 2050-ம் ஆண்டு வரையில் 55 கோடி பேரைப் பாதுகாக்க முடியும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.

நாட்டில் மது தொடர்பான சிகிச்சைக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.3 லட்சத்து 12 ஆயிரத்து 700 கோடி செலவிட வேண்டி இருக்கிறது. ஈரல் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, போதையில் விபத்து உள்ளிட்ட மூன்று வழிகளில் மது குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது தொடர்ந்தால் ஒவ்வொருவரின் சராசரி ஆயுட்காலம் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Next Story