500 மதுக்கடைகளை மூடியது மகிழ்ச்சி தருகிறதா?
தமிழ்நாடு சட்டசபையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக்கோரிக்கையின் போது ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகே உள்ள மதுபானக்கடைகள் மூடப்படும் என்பதே அந்த அறிவிப்பு ஆகும்.
500 டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 332 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருக்கின்றன. அதில் மூடுவதற்காக 500 கடைகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த 500 கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டு விட்டன.
தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 89 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழக அரசின் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை, உழவர் சந்தை பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை, உடையாா்பாளையத்தில் ஒரு டாஸ்மாக் கடை, அரியலூர்-செந்துறை சாலையில் குரும்பஞ்சாவடியில் உள்ள டாஸ்மாக் கடை என மொத்தம் 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனை அறியாத மது பிரியர்கள் அந்த டாஸ்மாக் கடை முன்பு எப்போது கடை திறக்கும் என்று காத்திருந்ததை காணமுடிந்தது. பின்னர் அவர்கள் தகவல் தெரிந்து அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்கள் வாங்கி சென்றனர்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
வரவேற்பு
அரியலூரை சேர்ந்த நீலகண்டன்:- அரியலூர் ரெயில் நிலைய சாலையில் 2 மதுபான கடைகள் இருந்தன. அதில் மக்கள் அதிகமாக சென்று வரும் சாலையில் இருந்த ஒரு கடை நேற்று மூடப்பட்டது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். இந்த சாலை வழியாக ரெயில் நிலையங்களுக்கு வருபவர்கள் மற்றும் அந்த பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கு செல்லும் பெண்கள் வந்து செல்வார்கள். இனி பெண்களுக்கு மதுப்பிரியர்களால் எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கும். இருந்தபோதும் ரெயில் பாலத்தின் கீழ் இடதுபுறம் உள்ள மதுபான கடையையும் மூடினால் அந்தப் பகுதியில் அமைதி நிலவும். குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்கும். தமிழக அரசு அந்த கடையையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுவில்லாத தமிழ்நாடு
திருமானூரை சேர்ந்த பாஸ்கர்:- மது பழக்கத்தால் பல குடும்பங்கள் பாழாகி வருகின்றன. மது போதையால் நாள்தோறும் விபத்து, சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. கூலி தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை டாஸ்மாக் கடையில் கொடுக்கிறார்கள். இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அனைத்து டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூடி மதுவில்லாத தமிழ்நாடு என்ற நிலை அடைய வேண்டும்.
விற்பனை அளவை குறைக்கலாம்
தா.பழூரை சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரி முருகன்:- மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் இதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதை சற்று யோசித்து பார்த்தோமானால் எதுவும் ஆகப்போவதில்லை. ஒரு கடை மூடப்பட்டால் அதற்கு அடுத்ததாக இருக்கக்கூடிய மற்றொரு கடைக்கு சென்று மதுபானங்களை வாங்கிக் கொள்ளும் வாய்ப்புகளையே தேடுவார்கள். எனவே மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்கள் மது பிரியர்களை அலைக்கழிக்கும் விஷயமாகவே இருக்கும். இதற்கு மாற்றாக தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அனைத்து கடைகளிலும் ஒரு நாளைக்கு இவ்வளவு மதுபானங்கள் தான் விற்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் விற்பனையின் அளவை குறைப்பதின் மூலம் மது பிரியர்களுக்கு அரசு நன்மை செய்யலாம். தொடர்ந்து மதுபானம் கிடைக்காமல் இருப்பவர்கள் சிறிது சிறிதாக மது பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு இந்த திட்டம் சரியான வாய்ப்பாக இருக்கும்.
பணியாளர்கள் சங்கம் வரவேற்பு
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) பொதுச்செயலாளர் த.தனசேகரன்:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்தப்படி 500 மதுபானக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளதை டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் வரவேற்கிறோம். அதேநேரம் மூடப்படும் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களை மூடப்படும் கடைகளுக்கு அருகே உள்ள கடைகளில் பணியாற்ற உடனடியாக உத்தரவு வழங்க வேண்டும். அதுபோல் கடந்த ஆட்சிக்காலத்தில் காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கடைகள் செயல்பட்டன. இதனால் கணக்குகளை முடித்து கொண்டு பணியாளர்கள் வீடுகளுக்கு செல்லும் போது இரவு 10 மணி ஆகிவிடுகிறது. ஆனால் தற்போது பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கடைகள் செயல்படுகின்றன். இதனால் தற்போது பணியாளர்கள் கணக்குகளை முடித்து கொண்டு வீடுகளுக்கு நள்ளிரவில்தான் செல்கின்றனர். இதனால் சமூக விரோத கும்பல்களிடம் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். எனவே மதுபான கடைகள் செயல்படும் நேரத்தையும் பணியாளர்கள் நலன் கருதி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தினம் ரூ.10 கோடி இழப்பு
டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் எஸ்.விசாகன்:- தமிழகத்தில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளில் உள்ள தளவாட சாமான்கள், ரசீது எந்திரங்கள், விற்பனை முனைய எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கைகள் எந்த சிரமமும் இல்லாமல் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் தினமும் ரூ.10 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மதுகுடிப்பதால் பாதிக்கப்பட்டு 25 கோடி பேர் இறப்பார்கள்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, தேசிய போதை மருந்து தடுப்பு சிகிச்சை மையம், சண்டிகர் உயர் மருத்துவ கல்வி மையம், சமுதாய மருத்துவ துறை, பொது சுகாதார கல்வி மையம் ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டன. இந்த ஆய்வில், 2011-ல் இருந்து 2050-ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட ஆண்டுகளில் இந்திய அளவில் மது குடிப்பதால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 25 கோடியே 80 லட்சமாக உயரும். இதனால் ஒவ்வொரு ஆண்டிலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.45 சதவீதம் இழப்பு உண்டாகும் எனக் கூறப்பட்டு உள்ளது. தற்பொழுது உள்ள சூழலில் மதுவால் 5 கோடியே 70 லட்சம் பேர் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு முறையான சிகிச்சை தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மது பழக்கம் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் மது ஒழிப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டால் 2050-ம் ஆண்டு வரையில் 55 கோடி பேரைப் பாதுகாக்க முடியும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.
நாட்டில் மது தொடர்பான சிகிச்சைக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.3 லட்சத்து 12 ஆயிரத்து 700 கோடி செலவிட வேண்டி இருக்கிறது. ஈரல் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, போதையில் விபத்து உள்ளிட்ட மூன்று வழிகளில் மது குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது தொடர்ந்தால் ஒவ்வொருவரின் சராசரி ஆயுட்காலம் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.