கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? பக்தர்கள் கருத்து
தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? என்பது குறித்து பக்தர்களும், அதிகாரியும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
கோவில்களில் அன்னதானம்
'தானத்தில் சிறந்தது அன்னதானம்', 'போதும் என்ற மனப்பான்மையை அளிப்பது அன்னதானம் மட்டுமே', உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நாம் அனுபவப் பூர்வமாகவே பார்க்க முடியும். பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பது சிறந்த மனித பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு அளிப்பது நம் கலாசாரத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலம் இல்லாதவருக்கு உணவு வழங்கப்படுகிறது.
அந்தவகையில், தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னதான திட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆன்றோர்கள், சான்றோர்கள், பக்தர்கள் வரவேற்பை பெற்று படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது தமிழகத்தில் 754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாள் முழுவதும் உணவு
இந்த திட்டத்தின் நீட்சியாக, 2012-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின் போது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்படி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது.
தற்போது ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 15 கோவில்களில் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறைந்தது 25 நபருக்கும், அதிகபட்சம் 100 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் அன்னதான திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? சாப்பிடும் பக்தர்களுக்கு மனநிறைவு கிடைக்கிறதா? என்று அறிந்து கொள்வதற்காக கோவில்களில் சென்று பார்த்த போது சாப்பாடு நிறைவாக இருக்கிறது, விசேஷ நாட்களில் உணவு வழங்கும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எண்ணிக்கையை அதிகரிக்கலாம்
இதுதொடர்பாக வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட மணிமேகலை கூறுகையில், "கோவிலில் வழங்கும் அன்னதானம் நன்றாக இருக்கிறது. 2 கூட்டு, சாம்பார், ரசம், மோர் போன்றவை கொடுக்கின்றனர். தற்போது இங்கு தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். அப்போது இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கலாம். அதேபோல், தக்காளி சாதம், தயிர் சாதம் போன்றவற்றை பொட்டலமிட்டும் பக்தர்களுக்கு அளிக்கலாம்" என்றார்.
அன்னதானம் சாப்பிட்ட முத்துலட்சுமி கூறுகையில், "மாதம் ஒருமுறை இந்த கோவிலுக்கு வருவேன். வரும் போதெல்லாம் அன்னதானத்தை பிரசாதம் போல் நினைத்து சாப்பிடுவேன். அது மன நிறைவை கொடுக்கிறது. விசேஷ நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது வயதான முதியவர்கள் அன்னதானம் சாப்பிட முடியாமல் போகும் நிலைமை உருவாகிறது. எனவே, விசேஷ நாட்களில் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். வாழை இலை விலை அதிகரிக்கும் நாட்களில் செலவினமும் அதிகரிக்கும். எனவே, தட்டில் சாப்பாடு வழங்கலாம். சாப்பிட்டு முடித்தவுடன் அந்த தட்டுகளை பக்தர்கள் கழுவி சுத்தம் செய்து கொடுக்க வேண்டும். அதேபோல், உணவு பரிமாறுவதை விடவும், பக்தர்களே தங்களின் தேவைக்கு ஏற்ப தட்டில் எடுத்துக் கொண்டால் உணவு வீணாவதையும் தடுக்க முடியும்" என்றார்.
கம்பம் கம்பராயப்பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட மாரியம்மாள் கூறுகையில், "பக்தர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் இந்த அன்னதான திட்டம் பயனுள்ளதாக உள்ளது. வெளியூர்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடைகளில் சாப்பிட்டால் அதிக செலவு ஆகும். அவர்களுக்கு இந்த அன்னதான திட்டம் கைகொடுக்கிறது. உணவு தரமாக உள்ளது. சாம்பாரில் காய்க றிகளை இன்னும் கொஞ்சம் சேர்த்து இருக்கலாம். குழந்தைகளுக்கு தேவைக்கு ஏற்ப அளவாக உணவு பரிமாறிவிட்டு, சாப்பிட்டு முடித்து மீண்டும் கேட்கும் போது பரிமாறினால் உணவு வீணாகாமல் இருக்கும்" என்றார்.
நன்கொடை உண்டியல்
கம்பத்தை சேர்ந்த பக்தர் விஜயலட்சுமி கூறுகையில், "கம்பம், வீரபாண்டி கோவில்களுக்கு தினமும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கிறார்கள். கோவில் அருகில் ஆதரவற்ற பலர் வசிக்கின்றனர். எனவே, இந்த கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அது பக்தர்களுக்கும், ஆதரவற்ற மக்களுக்கும் அதிக பயன் கொடுக்கும்" என்றார்.
பக்தர் குமார் கூறுகையில், "கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்தில் சோறு நன்கு வெந்து இருக்கிறது. இது முதியவர்களுக்கு ஜீரண பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். சில நாட்கள் உணவில் உப்பு குறைவாகவோ, அதிகமாகவோ இருந்து விடுகிறது. அளவான காரம், அளவான உப்பு சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். ஊறுகாய்களை தேவையான பக்தர்களுக்கு மட்டும் கேட்டுவிட்டு வைக்கலாம். வெள்ளிக்கிழமைகளில் காலை, மதியம், மாலை நேரங்களிலும் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தினால் இன்னும் அதிக பக்தர்கள் பயன்பெறுவார்கள்" என்றார்.
உத்தமபாளையத்தை சேர்ந்த பக்தர் பரசுராமன் கூறுகையில், "அன்னதானம் சாப்பிடும் இடத்தில் நன்கொடை உண்டியல் ஒன்று வைக்கலாம். கோவில் பிரசாதமாக கருதி செல்வந்தர்களும் அன்னதானம் சாப்பிடுகிறார்கள். நன்கொடை உண்டியலில் பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கையை செலுத்துவார்கள். அந்த தொகையை கோவில் உண்டியல் காணிக்கை கணக்கில் வைக்காமல், அன்னதான செலவினத்துக்கு பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது இந்த திட்டத்தை இன்னும் சிறப்புடன் செயல்படுத்த ஏதுவாக இருக்கும்" என்றார்.
உணவின் தரம் ஆய்வு
தேனி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன் கூறுகையில், "தேனி மாவட்டத்தில் கோவில்களில் அன்னதான திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவின் தரம், சமையல் கூடத்தின் சுகாதாரமான பராமரிப்பு குறித்து அடிக்கடி ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வின் போதெல்லாம் உணவு நன்றாக வெந்து இருக்க வேண்டும் என்றும், தண்ணீர் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
அன்னதானத்தை வயதானவர்கள், உடல் நலிவுற்றவர்கள் பலரும் சாப்பிடுகின்றனர். சாப்பிடும் பக்தர்களிடம் கருத்து கேட்டு வருகிறோம். பக்தர்களும் உணவு தரமாகவும், சுவையாகவும் இருப்பதாக தெரிவிக்கின்றனர். உணவுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளை தரமாக வாங்கி வர வேண்டும் என்றும் அறிவுறுத்தி, அதை கண்காணித்தும் வருகிறோம்" என்றார்.
மகிழ்ச்சி கொடுக்கும் பாராட்டு
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் அன்னதானம் சமைக்கும் அசோகன் கூறுகையில், "நான் 15 ஆண்டுகளாக சமையல் தொழில் செய்து வருகிறேன். 3 ஆண்டுகளாக வீரபாண்டி கோவிலில் சமைத்து வருகிறேன். தினமும் மனநிறைவோடு இந்த பணியை செய்கிறேன். நானே பரிமாறவும் செய்கிறேன். பக்தர்கள் இலையில் மிச்சம் வைக்காமல் முழுமையாக சாப்பிடுவதை பார்க்கும் போது மன நிறைவாக இருக்கும். சில பக்தர்கள் சமையல் அறைக்கு வந்து உணவு நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். அதைக் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கும்.
சில நேரங்களில் செல்வந்தர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் தங்களின் பிறந்தநாள், திருமண நாட்களுக்கு அன்னதான செலவை ஏற்றுக் கொள்வார்கள். அப்போது வடை, பாயாசம், அப்பளம் போன்றவையும் தயார் செய்து பக்தர்களுக்கு பரிமாறுவோம். தினமும் 100 பேருக்கு சமைத்த போதிலும், சிலர் குறைவாக சாப்பிடுவார்கள். இதனால், 130 பேர் வரை தினமும் சாப்பிடுகின்றனர். உணவு மீதமாகுவது போல் தெரிந்தால் பணியாளர்கள் சிலர் கோவில் பகுதிக்கு சென்று அன்னதானம் சாப்பிட விரும்புபவர்கள் வருமாறு அழைத்து, உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம்" என்றார்.