கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா?


கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா?
x

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கியது. இது ஒரு வகையான சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் என்பதால் தும்மும் போதும், இருமும் போதும் வெளியேற்றப்படும் சிறிய நீர்த்துளிகள் வழியாக அடுத்தவர்களுக்கு எளிதாக பரவி லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்தது.

கரூர்

பொதுமக்கள் அச்சம்

இந்தத் தொற்றால் இறந்தவர்களின் உடலை குடும்பத்தினர்கூட அருகில் சென்று பார்க்க முடியாத அளவுக்கு பரிதாபநிலை ஏற்பட்டது. உலகில் உயிர்களை பறித்ததுடன், மனிதர்களை மட்டும் அல்லாது அரசாங்கங்களையும் கடந்த சில ஆண்டுகளில் தலைகீழாகப் புரட்டி போட்டது கொரோனா.

தடுப்பூசிகள் மூலம் அதன் பரவலை தடுத்துவிட்டாலும் தற்போது 4-வது அலை, 5-வது அலை வரப்போகிறது என்றெல்லாம் ஆங்காங்கே புரளிகள் புரண்டு வருவதால், பொதுமக்கள் கொஞ்சம் அச்சப்படத்தான் செய்கின்றனர்.

பயணங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போதுகூட கண்டிப்பு இல்லாவிட்டாலும் தற்காப்புக்காக ஒரு சிலர் முக கவசங்கள் அணிந்து செல்வதையும் காணமுடிகிறது. உண்மையில் கொரோனா ஒழிந்து விட்டதா? தைரியமாக நடமாடலாமா? பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்லலாமா? என்று பலதரப்பட்ட கேள்விகளை பொதுமக்கள் கேட்கின்றனர். அதற்கு மருத்துவர்களும் மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

சாதாரண காய்ச்சல்

கரூரை சேர்ந்த பொது மருத்துவர் நிரேஷ் கண்ணா:- தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக கொரோனா தொற்று அதிகளவில் இல்லை. இதேபோல் உலக அளவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. தற்போது சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, மூச்சு திணறல் போன்ற கொரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளை பரிசோதித்து பார்த்தால் நெகட்டிவ் தான் வருகிறது. எனவே கொரோனா பாதிப்பு தற்போது எந்த வகையிலும் இல்லை. வழக்கமான வைரஸ் காய்ச்சல், டைபாய்டு, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற சாதாரணமாக வரக்கூடிய காய்ச்சல் தான் வருகிறது. சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண காய்ச்சல் போன்று மருந்து, மாத்திரை சிகிச்சை பெற்றாலே போதுமானது. இனி கொரோனா பயம் என்பது இப்போதைக்கு இல்லை.

சகஜ நிலைக்கு திரும்பியது

குளித்தலையை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் வினோத்:- கொரோனா நோய் பரவல் இருந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் முக கவசம் அணிந்திருந்தனர். தற்போது கொரோனா நோய் இருப்பதாக தெரியவில்லை. நோய் பரவல் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பி இயல்பாக வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் சிலர் முக கவசம் அணிந்து வருகின்றனர்.

சானிடைசர்...

நொய்யல் அருகே முத்தனூர் பகுதியை சேர்ந்த சுதா:- கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் இல்லாமல் உள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க சானிடைசர் போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். மேலும், கை, கால்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லாமல் இருந்தாலே கொரோனா தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்படும். கொரோனா விதிமுறைகளை தொடர்ந்து கடை பிடித்தாலே பொதுமக்களுக்கு கொரோனா தொற்று வராது.

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

சேமங்கி பகுதியை சேர்ந்த ராதா:- தமிழக அரசு அறிவித்த கொரோனா தடுப்பு முறைகளை கடைபிடித்து வந்தாலே கொரோனா தொற்று தமிழகத்தில் மீண்டும் வருவதற்கு வாய்ப்பில்லை. தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் இல்லை. இனி வருங்காலங்களில் கொரோனா தொற்று வரக்கூடிய வாய்ப்பு இல்லை. இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பீதி குறைந்தது

தோகைமலை பகுதியை சேர்ந்த மூர்த்தி:- கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தற்போது ஒற்றைப்படையில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கொரோனா நோய் முற்றிலும் போய்விட்டது என்று கூறிவிட முடியாது. இதனை தடுப்பதற்காக முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது பிறர் தும்மினாலும், இருமினாலும் அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் மற்றவர்களுக்கும் பரவிவிடும். அதேபோல் கைகளை சுத்தம் செய்யாமல் கண், மூக்கு, வாய் போன்றவற்றை தொடக்கூடாது. இதனாலும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. கொரோனா வந்தவர்களை பார்த்து பயந்து ஓடிய காலம் மறைந்து வருகிறது. தற்போது கொரோனா தொற்று என்பது ஒருவகை வைரஸ் காய்ச்சல் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். இதனால் பொதுமக்களிடையே ஏற்பட்ட பீதி குறைந்துவிட்டது.

முக கவசம் அணிய வேண்டும்

வெள்ளியணை அருகே உள்ள துளசி கொடும்பு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை வனிதா:- தற்போது பொதுமக்களிடம் கொரோனா தாக்கம் இல்லை என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதால் இனிமேல் தங்களுக்கு கொரோனா தாக்கம் இருக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி வெளியில் நடமாடுவதுடன் வழக்கமான தங்கள் வேலைகளை செய்து வருகின்றனர். கடந்த 3 அல்லது 4 மாதங்களில் பார்க்கும் போது முக கவசம் பெரிதாக எவரும் போடாத நிலையிலும் நோய் பரவல் குறைவாக இருக்கிறது. நோய்க்கான அறிகுறி இருந்தால் பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதித்து கொள்ள வேண்டும். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.

எதிர்ப்பு சக்தி

அரசு யோகா இயற்கை மருத்துவர் சுகுமார்:- கடந்த ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு பயத்தை போக்குவதற்கும், மன தைரியத்தை ஏற்படுத்தவும் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், சத்து நிறைந்த சுண்டல், வேர்க்கடலை, பயிறு, கபசுர குடிநீர் போன்றவை வழங்கப்பட்டன. இதனால் நோயாளிகளின் உடலில் உடனடியாக எதிர்ப்பு சக்தி அதிகமாகி வைரசின் வீரிய தன்மை குறைந்தது. நுரையீரல் பாதிப்புடன் வந்தவர்களுக்கு நீராவி சிகிச்சை மற்றும் தைலம் வழங்கப்பட்டது. மேலும் சுக்கு, மஞ்சள், மிளகு, துளசி, அதிமருதம் அடங்கிய பொடி கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் இயற்கையாகவே உடம்பில் எதிர்ப்பு சக்திகளை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. இயற்கையான உணவு பழக்க வழக்கங்கள், யோகா பயிற்சி எடுத்துக் கொண்டால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். தற்போது கொரோனா பாசிட்டிவ் என்பதே இல்லை. மக்கள் பயப்பட தேவையில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 More update

Next Story