கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா?மருத்துவர்கள், பொதுமக்கள் கருத்து
கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா? என்பது குறித்து மருத்துவர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சேலம்,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கியது. இது ஒரு வகையான சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் என்பதால் தும்மும் போதும், இருமும் போதும் வெளியேற்றப்படும் சிறிய நீர்த்துளிகள் வழியாக அடுத்தவர்களுக்கு எளிதாக பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்தது.
பொதுமக்கள் அச்சம்
இந்த தொற்றால் இறந்தவர்களின் உடலை குடும்பத்தினர் கூட அருகில் சென்று பார்க்க முடியாத அளவுக்கு பரிதாப நிலை ஏற்பட்டது. உலகில் உயிர்களை பறித்ததுடன், மனிதர்களை மட்டும் அல்லாது அரசாங்கங்களையும் கடந்த சில ஆண்டுகளில் தலைகீழாக புரட்டி போட்டது கொரோனா. தடுப்பூசிகள் மூலம் அதன் பரவலை தடுத்து விட்டாலும் தற்போது 4-வது அலை, 5-வது அலை வரப்போகிறது என்றெல்லாம் ஆங்காங்கே புரளிகள் புரண்டு வருவதால், பொதுமக்கள் கொஞ்சம் அச்சப்படத்தான் செய்கின்றனர்.
பயணங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போது கூட கண்டிப்பு இல்லாவிட்டாலும் தற்காப்புக்காக ஒரு சிலர் முக கவசங்கள் அணிந்து செல்வதையும் காணமுடிகிறது. உண்மையில் கொரோனா ஒழிந்து விட்டதா? தைரியமாக நடமாடலாமா? பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்லலாமா? என்று பலதரப்பட்ட கேள்விகளை பொதுமக்கள் கேட்கின்றனர். அதற்கு மருத்துவர்களும், மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
முககவசம் அணிவது நல்லது
இது குறித்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மணி கூறும்போது, கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வந்துவிட்டதாக கருத முடியாததற்கு 2 காரணிகள் உள்ளன. அதாவது கொரோனா வைரஸ் ஆர்.என்.ஏ. வைரஸ் என்பதால் அது தீவிரமாக உருமாறும் தன்மை கொண்டது. உருமாறும் கொரோனா வைரஸ் வீரியம் அடைந்து வெகுவாக பாதிப்பதற்கும், பரவுவதற்கும் சாத்திய கூறுகள் உள்ளன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் தினமும் 450 பேருக்கு கொரோனா மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒருவருக்கு கூட கொரோனா பாசிட்டிவ் வந்தது இல்லை. அனைவருக்கும் நெகட்டிவ் என்று தான் பரிசோதனை முடிவு வருகிறது. இருப்பினும் கொரோனா போய்விட்டது என சொல்ல முடியாது. நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.ஏனென்றால் வீட்டில் இருக்கும் சிறுவர்கள், வயதானவர்களையும் கவனிக்க வேண்டியுள்ளது. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது முககவசம் அணிந்து கொண்டு சென்று தற்காப்பாக இருப்பது நல்லது, என்றார்.
இணை நோய்கள்
கொரோனா தீவிரமாக பரவி வந்த போது, அதன் சிகிச்சைக்காக ஒருங்கிணைந்து பணியாற்றிய கதிரியக்கத் துறை நிபுணர் டாக்டர் வி.ஆனந்தகுமார் கூறும் போது, 'கொரோனா வைரஸ் பெரும் கொள்ளை நோயாக மாறி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்களின் வாழ்வியல் பாதிப்பு, தேக்க நிலைகளை உண்டாக்கியது. ஆனால் தற்போது 3-ம் நிலையில் பெரிய அளவில் கொரோனாவால் பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தாலும் சாதாரணமாக வரும் சளி, காய்ச்சல் போன்று கொரோனா உருமாறி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இப்போதும் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை மற்றும் இறப்புகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சீனாவில் கொரோனா இருக்கக் கூடாது என்ற அந்த நாட்டு அரசின் திட்டத்திற்கு ஏற்ப பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டு வருகின்றன. நம் நாட்டை பொறுத்த வரையில் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளை சேர்ப்பது மற்றும் இறப்பு போன்றவை குறைவாக இருக்கிறது. பொதுவாக தொற்று வந்து போனதற்குப் பிறகு இயற்கையில் ஏற்படும் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி போட்டதற்கு பிறகு ஏற்படும் எதிர்ப்பு சக்தி இந்த இரண்டும் இருந்தால் நல்லது. நம் நாட்டில் பொதுமக்களிடம் எதிர்ப்பு சக்தி உள்ளது. வருங்காலங்களில் எதிர்ப்பு சக்தி குறையும் போது பல இடங்களில் பூஸ்டர் என்ற தடுப்பூசி போடப்படலாம். ஆனால் 3-ம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு வராததால் பூஸ்டர் போடுவதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. இருந்தாலும் நாமும் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சோதனைகளுக்கு செல்லும் போதும் முக கவசத்தை அணிந்து செல்வது நல்லது. ஆனால் பொதுமக்களுக்கு இதுகுறித்து பயம் தேவையில்லை. முன்பரிசோதனை, தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறையில் நாம் பலம் வாய்ந்து இருப்பதால் பொதுமக்களுக்கு வாழ்வியல் பாதிப்பு, கல்வி, வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. காற்றில் பல வித தொற்றுகள் இருப்பதால் புதிய வாழ்வியல் முறையாக முக கவசம் எப்போதும் அணிவது நல்லது. அதேபோல் சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சுய தற்காப்பு முறைகளை கடைபிடிப்பது நன்மையைத் தரும். அதேநேரம் எதிர்ப்பு சக்தியை முறையாக பராமரிப்பது, இணை நோய்களை கட்டுக்குள் வைத்திருப்பதிலும் கவனம் செலுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும்' என்றார்.
கூட்ட நெரிசலை தவிர்ப்பது நல்லது
சேலத்தை சேர்ந்த நுரையீரல் மருத்துவ நிபுணர் டாக்டர் சித்துராஜ் கூறும் போது, இன்றைக்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொரோனா அறிகுறிகளுடன் நோயாளிகள் தென்படுகின்றனர். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையெனில் கொரோனா தாக்கும். அதேபோல் உடல் உறுப்புகள் செயல்பாட்டில் ஏதேனும் கோளாறு இருக்கையில், கொரோனா தாக்கும். இன்றும் கூட்ட நெரிசல், பயண நெரிசலை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க இயலவில்லை எனில் முக கவசம் அணிவது சாலச்சிறந்தது. வெளிநாடுகளுக்கு செல்லும் போது, உலக சுகாதார நிறுவனம் அந்த நாட்டை பற்றி கொடுத்துள்ள அறிக்கையை ஆராய்ந்து அதற்கேற்றபடி பாதுகாப்புடன் செல்வது நல்லது.
தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் போன்றவை போட்ட பின்பும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு நாம் பொது இடங்களில் பாதுகாப்புடன் இருப்பது நல்லது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கொரோனாவின் தாக்கம் 80 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் அங்கொன்றும், இங்கொன்றுமாக வருவதும் போவதுமாக இருப்பதால் நாம் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது' என்றார்.
நோய் பரவ வாய்ப்பு
பனமரத்துப்பட்டியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி கூறும்போது, '
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக பதிவாகி இருப்பது ஒரு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தியாக இருந்தாலும், கடந்த 2½ ஆண்டு காலமாக கொரோனா உடன் பயணித்த அனுபவத்தை மறந்து விட முடியாது. கொரோனா நோய் முற்றிலும் போய்விட்டது என்று கூறிவிட முடியாது. இதனை தடுப்பதற்காக முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது பிறர் தும்மினாலும், இருமினாலும் அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் மற்றவர்களுக்கும் பரவிவிடும். நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துவர்கள் முற்றிலுமாக கொரோனா ஒழிந்து விட்டது என்று கூறும் வரை முக கவசம் அணிய வேண்டும் என்று பள்ளி குழந்தைகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம்' என்றார்.
நுரையீரலை பாதுகாக்க
சேலத்தை சேர்ந்த சமூக சேவகி சி.ஆர்.தேவிகா கூறும் போது,'கொரோனா போய்விட்டதாக யார் கூறினார்கள்? அதன் தாக்கம் ஏதாவது ஒரு வைரஸ் மூலமாக பரவிக்கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக கொரோனாவால் நிறைய இளைஞர்கள் பலியாகி உள்ளனர். சமீபத்தில் எனக்கு தெரிந்த வாலிபர் ஒருவர் நுரையீரல் பாதிப்பால் இறந்துவிட்டதாக கூறுகிறார்கள். அதை எப்படி என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாரடைப்பால் இறப்பதை காட்டிலும் நுரையீரல் பாதிப்பு காரணமாக ஆண்கள் அதிகளவில் இறப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு தேவை. நுரையீரல் பாதிப்பால் ஏற்படும் பலி குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து அதற்கான தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா நோய் தடுப்புக்கு மட்டும் அல்லாமல் தொடர்ந்து நுரையீரலை பாதுகாக்க அனைவரும் முககவசம் அணி1:28 AM 2/22/2023 ய வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்' என்றார்.
பெருமாம்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் கூறும் போது,'வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நோய் வருவதற்கு முன்பாக அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. கொரோனா நம்மிடம் இருந்து போய்விட்டது என்று நினைத்துவிட முடியாது. கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைவரும் முககவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை கடைபிடித்து வந்தனர். ஆனால் தற்போது யாரும் முககவசம் அணிவது இல்லை. முககவசம் அணிந்து நம்முடைய நுரையீரலை நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நோயால் மட்டும் அல்லாமல் சுற்றுப்புறச்சூழல் மாசு காரணமாகவும் நுரையீரல் கெட்டு போவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, அனைவரும் முககவசம் அணிந்து செல்வது நல்லது' என்றார்.