பரமத்திவேலூா் பகுதியில் தொடரும் அட்டகாசம்:7 ஆடுகளை கொன்றது சிறுத்தைப்புலி? பொதுமக்கள் பீதி


பரமத்திவேலூா் பகுதியில் தொடரும் அட்டகாசம்:7 ஆடுகளை கொன்றது சிறுத்தைப்புலி? பொதுமக்கள் பீதி
x

பரமத்திவேலூா் பகுதியில் 7 ஆடுகளை கொன்றது சிறுத்தைப்புலியா? என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 2 மாதமாக போக்கு காட்டும் விலங்கை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

சிறுத்தைப்புலி நடமாட்டம்

பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சுண்டப்பனை, வெள்ளாளபாளையம், ரங்கநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆடுகள், கன்றுகள், நாய்கள் மற்றும் மயில்கள் உள்ளிட்டவைகளை கடந்த மாதம் வேட்டையாடி வந்த சிறுத்தைப்புலி கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் எந்த கால்நடைகளையும் வேட்டையாடவில்லை. கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தைப்புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தைப்புலியின் கால் தடங்களை வைத்து மேற்கண்ட கிராமங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.

இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமலும், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கும் உள்ளாகியிருந்தனர். சிறுத்தைப்புலியை பிடிக்கவும் அதன் இருப்பிடத்தை கண்டறியவும் பழங்குடி இனத்தை சேர்ந்த வனக்காப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு வனத்துறையினருடன் இணைந்து சிறுத்தைப்புலியை தீவிரமாக தேடி வந்தனர்.

18 கண்காணிப்பு கேமராக்கள்

இந்தநிலையில் செஞ்சுடையாம்பாளையம் பகுதியில் பயன்படுத்தப்படாமல் உள்ள கல் குவாரி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு சிறுத்தைப்புலி வந்து சென்றதற்கான கால்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்தனர். இப்பகுதியில் இருந்து இரவில் 30 கிலோமீட்டர் தூரம் வரை வெளியே சென்று வேட்டையாடிவிட்டு மீண்டும் அதன் இருப்பிடத்திற்கு திரும்பி வருவதும் தெரியவந்தது. இந்த நிலையில் மாவட்ட வனச்சரக அலுவலர் பிரவீன்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தைப்புலி வந்து செல்லும் இடம் கண்டறியப்பட்ட பகுதியில் மொத்தம் 18 கண்காணிப்பு கேமராக்களையும், 3 கூண்டுகள் வைத்து சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

மேலும் இரவு நேரங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிரோன் கேமராக்கள் மூலமும் சிறுத்தைப்புலியை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மனிதர்கள் வாசம் தென்பட்டால் மீண்டும் திரும்ப அந்த இடத்திற்கு சிறுத்தைப்புலி வராது என்பதால் அப்பகுதியில் வனத்துறையினர் யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் சிறுத்தைப்புலி எந்த கால்நடைகளையும் வேட்டையாடவில்லை என்பதால் இடம் மாறி வேறு பகுதிக்கு சென்று விட்டதா? அல்லது கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டதால் குவாரி பகுதியிலேயே பதுங்கி வெளியே வராமல் இருக்கிறதா எனவும் வனத்துறையினர் கருதினர்.

7 ஆடுகள் செத்தன

இந்நிலையில் சோழசிராமணி அருகே சிறுபூலாம்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 50) என்பவர் அவரது வீட்டின் அருகே ஆடுகளை கட்டி இருந்தார். இந்நிலையில் நேற்று காலை சுந்தரமூர்த்தி, ஆடுகளை கட்டியிருந்த பகுதிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு 7 ஆடுகள் செத்து கிடந்தன. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து வனத்துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் செத்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். இதையடுத்து கடந்த ஒரு மாதமாக மறைந்திருந்த சிறுத்தைப்புலி தாக்கியதில் ஆடுகள் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது மர்ம விலங்குகள் தாக்கியதில் இறந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர். சோழசிராமணி அருகே மீண்டும் சிறுத்தைப்புலியின் அட்டகாசத்தால் ஆடுகள் செத்தனவா எனவும், அதன் கால் தடங்களையும் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

வனத்துறை திணறல்

பரமத்திவேலூர் பகுதியில் கால்நடைகளை மர்மவிலங்கு அடித்துக் கொல்லும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். அட்டகாசம் செய்து வருவது சிறுத்தை புலி என்று கூறப்பட்டாலும், அந்த விலங்கு எது என்பது புதிராகவே உள்ளது.

கடந்த 2 மாதங்களாக போக்கு காட்டி வரும் விலங்களை பிடிக்க முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி அட்டகாசம் செய்து வரும் விலங்கை பிடிக்க தனிக்குழு ஒன்று அமைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

1 More update

Next Story