குஜராத் வாலிபருடன் குருத்திகாவுக்கு திருமணம் நடந்தது உண்மையா? -பதிவுச்சான்றிதழ் குறித்து போலீசார் சந்தேகம் எழுப்புகிறார்கள்


குஜராத் வாலிபருடன் குருத்திகாவுக்கு  திருமணம் நடந்தது உண்மையா? -பதிவுச்சான்றிதழ் குறித்து போலீசார் சந்தேகம் எழுப்புகிறார்கள்
x

குஜராத் வாலிபரை இளம்பெண் குருத்திகா திருமணம் செய்ததாகவும், அது சம்பந்தமாக வெளியான பதிவுச்சான்று உண்மையானதுதானா? என்றும் போலீசார் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்கள்..

மதுரை


குஜராத் வாலிபரை இளம்பெண் குருத்திகா திருமணம் செய்ததாகவும், அது சம்பந்தமாக வெளியான பதிவுச்சான்று உண்மையானதுதானா? என்றும் போலீசார் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்கள்..

திருமண விவகாரம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா, கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் மாரியப்பன் வினித் (வயது 22). இவர் குஜராத்தை பூர்வீகமாக கொண்ட நவீன் படேல் என்பவரின் மகள் குருத்திகாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்தார். இதுசம்பந்தமான புகாரின்பேரில், சில நாட்களுக்கு முன்பு தென்காசி அருகே போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பியபோது, நவீன் படேல் தரப்பினர் வினித்தை தாக்கிவிட்டு, குருத்திகாவை கடத்திச்சென்றதாக புகார்கள் எழுந்தன.

இதற்கிடையே குஜராத்தை சேர்ந்த மைத்ரிக் ஹரேஷ்பாய் என்பவருடன் குருத்திகாவுக்கு திருமணம் நடந்துவிட்டதாகவும், கடந்த 31-ந்தேதி அந்த திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் ஆவணங்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமல்லாமல் தென்காசி வாலிபர் வினித் தரப்பினர் தன்னை கட்டாயப்படுத்தி கடத்திச்சென்று திருமணம் செய்து அவரது வீட்டில் சிறை வைத்ததாக குருத்திகா தரப்பில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, சில ஆவணங்களும் வெளியிடப்பட்டன.

உண்மையான சான்றிதழா?

இந்தநிலையில் இந்த ஆவணங்கள் அனைத்தும் வினித் விவகாரத்தை திசை திருப்பும் வகையில் போலியாக தயாரிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஏற்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் போலீசார் கூறுகையில், குருத்திகா தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள திருமண போட்டோவும், பதிவுச்சான்றிதழும் உண்மையானதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில் அந்த சான்று, அசல் என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை.

குருத்திகாவிடம் உரிய விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சமயத்தில் பதிவுச்சான்றிதழ் விவகாரம் குறித்தும் உரிய விசாரணை நடத்தி, அதை உறுதிப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இன்று விசாரணை

போலீசாரின் இந்த தகவலால் வினித்-குருத்திகா விவகாரத்தில் மேலும் சில திருப்பங்கள் வரலாம் என வக்கீல்களும் கருதுகிறார்கள்.

இதற்கிடையே கோர்ட்டு அளித்த 2 நாள் அவகாசம் முடிந்து இருப்பதால் தென்காசி அருகே காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குருத்திகாவிடம் இன்று முதல் வாக்குமூலம் பெறவும் நடவடிக்கை எடுத்து இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறினர்.


Next Story