பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது குறித்து பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வெண்மை புரட்சி
மனிதனின் அன்றாட சத்து தேவையை நிறைவு செய்வதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒட்டுமொத்த உலக பால் உற்பத்தியில் இந்தியா 21 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. கடந்த 1950-60 காலகட்டங்களில் இந்தியாவில் இருந்த நிலை வேறு. மக்களுடைய அன்றாட பால் தேவையைக்கூட பூர்த்தி செய்யமுடியாத சூழல் அப்போது இருந்தது. அதன்பின்னர் வெண்மை புரட்சி நிகழ்த்தப்பட்டு, பால் உற்பத்தியில் தன்னிறைவு நிலையை நாம் எட்டியிருக்கிறோம்.
விலை உயர்வு
இந்தியா கடந்த ஆண்டு மட்டும் 21 கோடி டன் பால் உற்பத்தி செய்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு நிறுவனமான ஆவின், பாலையும், தயிர், மோர் உள்பட பால் சார்ந்த பொருட்களையும் விற்பனை செய்துவருகிறது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இது, கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது.
இந்தநிலையில், ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆகவும் (ரூ.12 உயர்வு), 'டீ மேட்' (சிவப்பு) பாலை ஒரு லிட்டர் ரூ.60-ல் இருந்து ரூ.76 ஆகவும் (ரூ.16 உயர்வு), 'கோல்ட்' (பிரவுன்) பாலை ஒரு லிட்டர் ரூ.47-ல் இருந்து ரூ.56 ஆகவும் (ரூ.9 உயர்வு) உயர்த்தியிருக்கிறது. பால் அட்டை வைத்திருப்பவர்கள் ஆரஞ்சு ரக பாலை, ஒரு லிட்டர் ரூ.46-க்கு பெற்றுக்கொள்ளலாம். அதே சமயத்தில் நீலம் மற்றும் பச்சைநிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
பொதுமக்கள் கருத்து
ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள், டீக்கடைக்காரர்கள், பால் முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பால் விலை உயர்வு டீ, காபி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது குறித்து பால் முகவர்கள், டீக்கடை நடத்துபவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
பாலின் விலையை உயர்த்தலாமா?
பால் வியாபாரி கணக்கம்பட்டி மாரிமுத்து:- ''பசு மாட்டின் பாலை தினமும் வீடு, வீடாக வினியோகம் செய்து வருகிறேன். 250-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மொபட்டில் சென்று விற்று வருகிறேன். ஒரு லிட்டர் பால் ரூ.40-க்கு விற்கப்படுகிறது. மாட்டில் இருந்து கறந்து நேரடியாக விற்பனை செய்யப்படுவதால் இந்த பாலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இதேபோல ஓட்டல்களுக்கும், டீக்கடைகளுக்கும் பாலினை விற்று வருகின்றனர். ஆவின் பாலில் ஆரஞ்சு பாக்கெட் நிற பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாங்களும் பாலின் விலையை உயர்த்தலாமா? என ஆலோசனையில் உள்ளோம்'' என்றார்.
தண்ணீர் கலந்து பயன்படுத்த முடியும்
புதுக்கோட்டையில் ஆவின் பால் பூத் நடத்தும் வியாபாரி நல்லதம்பி :- ''ஆவின் பாலில் வீட்டு உபயோகத்திற்கு தினமும் பயன்படுத்தக்கூடியதில் விலை எதுவும் ஏற்றம் இல்லை. பச்சை நிற பால் பாக்கெட், இளஞ்சிவப்பு நிற பால் பாக்கெட் விலை ஒரு லிட்டர் ரூ.43-க்கும் விற்கப்படுகிறது. வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீக்கடைகளில் பயன்படுத்தக்கூடிய ஆவின் பாலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.12 உயர்ந்து ரூ.60 ஆக விற்பனையாகிறது. இந்த பால் பாக்கெட் ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது. டீக்கடைகளில் இந்த பால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பாக்கெட்டை குறைந்தது 2 நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த முடியும். இந்த பாலின் விலை மட்டும் தான் உயர்ந்துள்ளது.
இதனை சாதாரண பொதுமக்கள் அதிக அளவில் யாரும் வாங்குவதில்லை. விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் உள்பட ஒரு இடத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகிற நிகழ்வில் டீ, காபி கொடுக்க இந்த ஆரஞ்சு நிற பால் பாக்கெட் வாங்கி பொதுமக்கள் பயன்படுத்துவார்கள். இந்த பாலில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கலந்து பயன்படுத்த முடியும். இந்த பாலின் விலை உயர்வால் டீக்கடைகளில் டீ, காபியின் விலை உயர்த்துவது தொடர்பாக தற்போது எதுவும் முடிவு எடுக்க முடியாது'' என்றார்.
9 ஆயிரம் லிட்டர் விற்பனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவின் பால் தினமும் 30 ஆயிரம் லிட்டர் விற்பனையாகுகிறது. இதில் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் 9 ஆயிரம் லிட்டர் விற்பனையாவதாக ஆவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இல்லத்தரசிகளை பாதிக்கும்
பொன்னமராவதி தாலுகா காரையூரை சேர்ந்த ரினோஸ் பாத்திமா நீதியரசன் சாதிக்:-
பால் விலை உயர்வு சாதாரண நடுத்தர ஏழைக் குடும்பங்களை பெரிதும் பாதிக்கும். பால் கொள்முதல் விலை உயர்த்தாமல் பால் விற்பனை விலையை உயர்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பால் விலை உயர்த்திய போது எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் அதே செயலை செய்வது அன்றாட வாழ்க்கையை நடத்தும் ஏழை, எளிய நடுத்தரமக்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு பெரிதும் பாதிக்கும். எனவே முதல்-அமைச்சர் பால் விலையை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
பால் வியாபாரம் நஷ்டம்
கீரனூர் அடுத்துள்ள இளையாவயல் கிராமத்தை சேர்ந்த மணிராஜன்:- கறந்த பால் கடைகளுக்கு ரூ.35-க்கும், வீடுகளுக்கு ரூ.40-க்கும் கொடுக்கிறோம். பால் பண்ணைகளில் முன்பு 30 ரூபாய்க்கு எடுத்துக் கொண்டவர்கள் தற்போது 32 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள். இது மிகவும் குறைந்த விலை. பால் வியாபாரம் செய்வது நஷ்டம் தான். கால்நடை தீவனங்கள் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மாடுகளுக்கு தீவனம் வாங்கி போட வேண்டும் என்றால் மாட்டைவிற்று தான் செய்ய வேண்டும். எனவே பசுமாடு வளர்ப்பது புண்ணியம் என்று கருதி பிழைப்பு நடத்துகிறோம் என்றார்.
டீக்கடை தொழில் செய்வது கடினம்
கந்தர்வகோட்டை நகரில் டீக்கடை நடத்தி வரும் மதிவாணன்:- வணிக பயன்பாட்டிற்கு உரிய பாலின் விலை தற்போது ரூ.11 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் கந்தர்வகோட்டை போன்ற கிராமப் பகுதிகளில் டீக்கடை தொழில் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. மேலும் இந்த பாலினை ஓட்டல் மற்றும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் பயன்படுத்துகின்றனர். ஆகவே அதிக பயன்பாட்டில் உள்ள இந்த பாலின் விலையை ஏழைகள் பயன்படுத்துகின்ற வகையில் கிடைக்கச் செய்ய வேண்டும். இதனால் கிராமப் பகுதியில் உள்ள டீக்கடைகளில் ஏழைகளுக்கு தரமான விலையில் டீ வழங்க முடியும் என்றார்.