அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வந்தது.
இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்தனர்.
இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஒமந்தூரர் மருத்துவமனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " அமைச்சர் செந்தில் பாலாஜி நலமாக இருக்கிறார். இது பா.ஜ.கவின் பழிவாங்கும் நடவடிக்கை. இந்த உருட்டல், மிரட்டல்களுக்கு திமுக அரசு அஞ்சாது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்" என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. காரணம் எதுவும் சொல்லாமல் அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
உறவினர்கள், நண்பர்கள் யாரிடமும் அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லை. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து உறுதியாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எந்த வழக்குக்காக விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம். கட்சித் தலைமையுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கஸ்டடியில் இருப்பதால் முன் ஜாமீன் தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ரகுபதி, "முழுக்க முழுக்க இது மனித உரிமை மீறிய செயல். திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமானவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். எந்த காரணத்திற்காக அமலாக்கத்துறை வந்தது என தெரிந்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்" என்று அவர் கூறினார்.
இதனிடையே செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் சோதனை நிறைவடைந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் இருந்து 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கரூரில் இருந்து புறப்பட்டுள்ளனர்.