ஐ.எஸ். வீடியோக்கள் அடங்கிய 'பென் டிரைவ்' பறிமுதல்


ஐ.எஸ். வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஒருவரின் வீட்டில் இருந்து ஐ.எஸ். இயக்கத்தின் வீடீயோக்கள் அடங்கிய ‘பென் டிரைவை’ போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோயம்புத்தூர்


கோவையில் ஒருவரின் வீட்டில் இருந்து ஐ.எஸ். இயக்கத்தின் வீடீயோக்கள் அடங்கிய 'பென் டிரைவை' போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதிரடி சோதனை

கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ந் தேதி நடைபெற்ற கார் வெடிப்பில் ஜமேஷா முபின் இறந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட தமிழக போலீசார், ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாரூதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் கோவை மாநகரில் சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நபர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஒரு சில வீடுகளில் இருந்து செல்போன்கள், பென் டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பறிமுதல் செய்யப்பட்ட 'பென் டிரைவ்' ஒன்றை போலீசார் சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர்

100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள்

அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. அதில் ஐ.எஸ். இயக்கத்தினர் மிக கொடூரமாக சிலரை கழுத்தை அறுத்து கொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஐ.எஸ். இயக்கத்தின் பிரசார வீடியோக்கள், அவர்கள் இயக்க செயல்பாடுகள் குறித்த வீடியோக்கள் இருந்துள்ளன. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரை அழைத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் பல்வேறு தகவல்கள் அழிக்கப்பட்டு உள்ளன. இந்த அழிக்கப்பட்ட தகவல்களை நிபுணர்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அழிக்கப்பட்ட தகவல்கள் மீண்டும் கிடைத்தால் மட்டுமே அவர்கள் யார்? யாரிடம் பேசினார்கள், எந்த மாதிரியான தகவல்களை அனுப்பினர் என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story