பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?-பொதுமக்கள் மாறுபட்ட கருத்து


பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது குறித்து பொதுமக்கள் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவித்து உள்ளனர்.

சேலம்

2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த ஈழ போரில் கடும் சண்டையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அவர் இறந்து கிடக்கும் படங்களும் வெளியானது. ஆனாலும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சில தலைவர்கள் அடிக்கடி பேசிக்கொண்டே வந்தனர்.

பழ.நெடுமாறன் பரபரப்பு கருத்து

இந்தநிலையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், ''பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். நலமுடன் இருக்கிறார். அவரது குடும்பத்தினருடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அவர்களின் அனுமதியின் பேரில்தான் இந்தக் கருத்தை சொல்கிறேன். உரிய நேரத்தில் பிரபாகரன் வெளிப்படுவார்'' என தெரிவித்தார்.

அவரது இந்த கருத்தை இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. இந்த மாறுபட்ட கருத்துகள் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன. பழ.நெடுமாறனின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளார்கள். அதேபோல மக்களும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

அதன் விவரம் வருமாறு:-

ஈழ தமிழர்களுக்கு பாதிப்பு

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சச்சிதானந்தம்:-

லெனின் போன்ற தலைவர்கள் தலைமறைவாக இருந்தபோது ரகசியம் காக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மக்கள் முன் தோன்றினர். ஆனால் பிரபாகரன் விஷயத்தில் தொடர்ந்து பழ.நெடுமாறன் ஒரு கருத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறார். பிரபாகரன் குடும்பத்தினருடன் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கருத்தாகும். பிரபாகரன் உயிருடன் வருவது மகிழ்ச்சிதான். என்றாலும், இந்த சூழலில் பழ.நெடுமாறன் இந்த கருத்தை தெரிவித்தது ஏன்? என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

ஏற்கும் வகையில் இல்லை

சேலம் அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்தசந்துரு:-

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த போரில் இலங்கை அரசால் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் அதற்கான தகுந்த ஆதாரங்களையும் அந்த அரசு வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு அவர் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் கூறியிருக்கும் செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக எவ்வளவு பிரச்சினை நடந்துள்ளது. அவர் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக வெளியே வந்து தமிழர்களுக்காக போராடியிருப்பார். பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று தான் கருதுகிறோம். ஆகையால் பழ.நெடுமாறன் கூறிய கருத்தை ஏற்கும் வகையில் இல்லை.

இரட்டிப்பு மகிழ்ச்சி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டசெயலாளர் மோகன்:-

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருக்கிறார் என்றால் சந்தேகப்பட வேண்டியதில்லை. அவர் ஆராய்ந்து தான் இந்த தகவலை கூறியிருப்பார்.

மேலும் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றால் தமிழர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.

நம்ப முடியாததாக உள்ளது

தேவூர் அருகே அரசிராமணி செட்டிப்பட்டியை சேர்ந்த தீபா:-

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறியிருப்பது சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது. பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்றால் அதற்கான ஏதாவது ஒரு ஆதாரத்தை கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வாய்மொழியாக மட்டும் கூறி இருப்பதால் முழுமையாக ஏற்று கொள்ள முடியவில்லை. மேலும் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் படும் கஷ்டத்தை பார்த்து இவ்வளவு ஆண்டுகள் பொறுமையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அவர் உயிருடன் இருக்கிறார் என்று கூறுவது நம்ப முடியாததாக உள்ளது.

மறக்க முடியாத நாள்

ஆண்டிபட்டியை சேர்ந்த மணிகண்டன்:-

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்2009-ம் ஆண்டு நடந்த போரில் இறந்து விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்து அவருடைய உடலையும் வெளியிட்டது. ஆனால் பலரும் அதனை ஏற்க மறுத்தனர். ஒரு தமிழனாக நானும் அதனை ஏற்கவில்லை. இந்த நிலையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் கூறி இருக்கிறார். அவர் பொய்யான தகவலை கூற வாய்ப்பில்லை.

எனவே பிரபாகரன் உயிருடன் வந்தால் அது வரலாற்றில் மறக்கமுடியாத நாளாகவே இருக்கும். அவர் மீண்டும் வந்தால் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும். அதற்கான நல்வாய்ப்பு உருவாகும்.

இவ்வாறு பொதுமக்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.


Next Story