கரூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்து மறைந்து வருகிறதா?


கரூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்து மறைந்து வருகிறதா?
x

கரூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்து மறைந்து வருகிறதா? என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரூர்

ரூபாய் நோட்டுகள்

பண்டைய காலங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளவும், தான் பெற்ற பொருள் மற்றும் கடனுக்காக மற்றவர்களுக்கு திருப்பி செலுத்தவும் அந்தப் பொருளுக்கு ஈடான ஒரு மதிப்பை உறுதிப்படுத்தும் வகையில் புழக்கத்தில் கொண்டுவரப்பட்டது நாணயம். அக்காலத்தில் நாணயங்கள் தங்கம், வெள்ளி போன்ற பல உலோகங்களால் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. நாகரீக வளர்ச்சியின் காரணமாக நாணயங்கள் தங்கம், வெள்ளி அல்லாத பிற உலோகங்களிலும், ரூபாய் நோட்டாகவும் அச்சிடப்பட்டன. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வகையான நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகிறது.

புழக்கத்திற்கு வந்தது

நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகள் இல்லாமல் எந்த ஒரு பொருளையும் ஒரு தனிநபர் வாங்கிக் கொள்ள முடியாது. அந்த அளவிற்கு பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிலருக்கு நாணயங்களை சேமித்துவைப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். பின்னர் பண தட்டுப்பாடு காரணமாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள தாங்கள் சேமித்து வைத்த நாணயங்களை பொதுமக்கள் வெளியே எடுத்து பயன்படுத்துகின்றனர்.

நமது நாட்டைப் பொறுத்தவரை ரிசர்வ் வங்கி மூலம் நம் நாட்டு மக்கள் தொகை, பொருளாதார உயர்வு ஆகியவற்றை பொறுத்து நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு விடப்படுகிறது. அதுபோல் ரிசர்வ் வங்கி மூலம் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்ட நாணயங்களில் ஒன்று 10 ரூபாய் நாணயம்.

போலியானது

ரிசர்வ் வங்கி மூலம் பல வகையான 10 ரூபாய் நாணயங்கள் அச்சிடப்பட்டு வெளியாகின. இந்த நாணயம் வெளியிடப்பட்ட ஆரம்ப காலங்களில் 10 ரூபாய் நாணயத்தின் புழக்கம் அதிகம் இருந்தது. இந்தநிலையில் கரூர் மாவட்ட பகுதியில் உள்ள நகர மற்றும் கிராம பகுதிகளில் ஒரு சில வருடங்களாக இந்த 10 ரூபாய் நாணயம் பரவலாக புழக்கத்தில் இல்லை. இந்த மாவட்டம் அல்லது பல்வேறு மாவட்டங்களில் இந்நிலை உள்ளது.

இந்தநிலையில் குறிப்பிட்ட வடிவிலான சில 10 ரூபாய் நாணயத்தை தவிர மற்ற 10 ரூபாய் நாணயங்கள் போலியானது என்ற பரவலாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிடும் அசல் நாணயங்களை போலவே கள்ளச் சந்தையில் போலியாக 10 ரூபாய் நாணயம் அச்சிடப்பட்டு அவை பொதுமக்களின் புழக்கத்தில் விடப்படுவதாக கூறப்படுகிறது. இது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாங்க மறுப்பு

இது ஒருபுறம் இருப்பினும் கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடைகளில் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து பொருள்கள் வாங்கிச்செல்கின்றனர். ஆனால் மீதி சில்லரைக்காக 10 ரூபாய் நாணயத்தை கடைக்காரர் கொடுக்கும்போது அதை பொருள்கள் வாங்க வருபவர்கள் வாங்க மறுத்து விட்டு நோட்டாக கேட்கின்றனராம். அப்படி இல்லையென்றால் பிறகு வாங்கிக்கொள்வதாகவும், இல்லை அதற்கும் பொருள்கள் வாங்கிச்செல்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

இதுபோல் பஸ்களிலும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க பஸ் கன்டக்டர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். அதுகுறித்து கேட்டால் பஸ் கன்டக்டர்கள் நாங்கள் பயணிகளிடம் வாங்கினாலும், அதை மற்றொரு பயணிக்கு கொடுக்கும்போது அவர் வாங்க மறுக்கிறார். ரூபாய் நோட்டாக கேட்கிறார். இதனாலேயே 10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஒருபடி மேலாக மின்சாரவாரியம், டாஸ்மாக் உட்பட சில அரசு சார்ந்தவற்றில் வசூலான தொகையை வங்கியில் செலுத்தச் சென்றால் குறிப்பட்ட சில வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கப்படுகிறதாம்.

தவறான கருத்து

எந்த ஒரு ரூபாய் நோட்டுகள் கிழிந்தாலோ அல்லது பலவகையில் சேதமடைந்தாலோ அதை வங்கிகளில் செலுத்தும்போது அதற்கு பதில் வேறு நல்ல நோட்டுகள் வழங்கப்படுகின்றன. இப்படி இருக்கும் பட்சத்தில் வங்கிகளிலேயே 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பது எந்தவகையில் நியாயமானது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதுபோல ரிசர்வ் வங்கி மூலம் அச்சிடப்பட்டு வெளியிடும் மற்ற நாணயங்கள் ஏற்கப்படும் பொழுது இந்த 10 ரூபாய் நாணயம் மட்டும் செல்லாது என்ற தவறான கருத்து பரவுவதற்கு காரணம் என்ன என்றும் கேட்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி மூலம் பலமுறை தெளிவான அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்கு உறுதியான மற்றும் இறுதியான நடவடிக்கை எடுத்து உண்மையில் ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் எவை என்பதை ஆணித்தரமாக உறுதிபடுத்தவேண்டும். மேலும் அனைத்து இடங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க புதிய ஆணை பிறப்பிக்கவேண்டும். இல்லையெனில் குழப்பமான இந்தநிலை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும் என்கின்றனர் பலதரப்பட்ட மக்கள்.

வாடிக்கையாளர்கள் வாங்குவதில்லை

இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றாலும் அதிகப்படியான நாணயங்கள் வங்கியிலேயே தங்கி விடுகின்றது. அதை மீண்டும் வங்கி வாடிக்கையாளர்களிடம் வழங்கும்போது அவர்கள் வாங்குவதில்லை என்றார்.

பொதுமக்கள் கருத்து

10 ரூபாய் நாணயம் குறித்து கரூர் மாவட்ட பொதுமக்கள் கூறிய கருத்து பின்வருமாறு:-

தெற்கு மயிலாடியை சேர்ந்த விளம்பர வடிவமைப்பு செய்யும் தொழிலாளி நந்தகுமார் கூறியதாவது:- 10 ரூபாய் நாணயங்கள் தற்பொழுது புழக்கத்தில் இல்லை. நம்மிடம் இருக்கும் நாணயத்தை கொண்டு கடைக்குச் சென்றால் அவர்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால் அந்த நாணயத்தை எந்த வகையிலும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்றார்.

குளித்தலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் கூறியதாவது: ஆட்டோவில் வரும் பயணிகள் பெரும்பாலும் 10 ரூபாய் நாணயங்கள் வழங்குவதை தவிர்த்து விட்டனர். இந்த நாணயம் செல்லாது என்ற பரவலான கருத்து கூறப்பட்டு வருவதால் அந்த நாணயங்களை நாங்களும் வாங்குவது இல்லை என்றார்.

வாங்கிக்கொள்வேன்

பழங்கள் மற்றும் பழச்சாறு விற்பனை செய்யும் பரமசிவம் கூறியதாவது:- எனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் 10 ரூபாய் நாணயம் வழங்கும்போது அதனை நான் வாங்கிக் கொள்வேன். அதுபோல நான் கொடுத்தாலும் வாடிக்கையாளர்கள் பலர் வாங்கிக் கொள்கின்றனர். கூடுதலாக நாணயங்கள் சேரும்பொழுது அதை இங்குள்ள பெரிய அளவிலான வியாபாரம் செய்யும் கடைகளில் கொடுத்து நோட்டாக மாற்றிக் கொள்வேன் என்றார்.

பெட்டிக்கடை நடத்தி வரும் கதிர்வேல் கூறுகையில், எனது கடைக்கு வரும் சிலர் பத்து ரூபாய் நாணயம் கொடுத்தால் நான் வாங்கிக் கொள்வேன். ஆனால் எங்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் வாங்குவதில்லை. வாடிக்கையாளர்கள் வாங்காத பட்சத்தில் எங்களிடம் சேரும் நாணயங்களை தனியார் நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் வழங்கி விடுவோம். 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற ஒரு தவறான கருத்து பொதுமக்கள் மத்தியில் எழுந்ததே இதற்கு காரணம் என்றார்.


Next Story