ஆணவக்கொலையில் ஈடுபட்ட சங்கர் கிளை செயலாளரா...?- அ.தி.மு.க.வினர் மறுப்பு!


ஆணவக்கொலையில் ஈடுபட்ட சங்கர் கிளை செயலாளரா...?- அ.தி.மு.க.வினர் மறுப்பு!
x

ஜெகன் ஆணவக் கொலை வழக்கில் கைதான சங்கர், அதிமுக கிளைச் செயலாளர் இல்லை என்றும், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தான் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சென்னை

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (வயது28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான்கொட்டாயை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சரண்யா (21). ஜெகனும், சரண்யாவும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை மீறி சரண்யா கடந்த ஜனவரி 26-ந் தேதி ஜெகனை திருமணம் செய்தார். இந்த நிலையில் ஜெகனை நேற்று முன்தினம் அவரது மாமனார் சங்கர் (43) உள்பட சிலர் சேர்ந்து கிருஷ்ணகிரி டேம் ரோடு சாலையில் அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கவுரவக்கொலை செய்தனர்.

இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அடித்து நொறுக்கப்பட்டது இந்த கொலை தொடர்பாக சங்கர், கிருஷ்ணகிரி கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்த்தில் கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த ஜெகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

ஜெகன் என்பவரை சங்கர்,உள்ளிட்ட மூவர் ஆயுதங்களால் தாக்கியதில், ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், சங்கரின் மகள் சரண்யாவை, டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான ஜெகன் காதலித்து கடந்த ஜனவரியில் திருமணம் செய்தார். இதனால் ஆத்திரமுற்ற சங்கர் உள்ளிட்டோர் ஜெகனை கொலை செய்துள்ளனர்.

இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர் அ.தி.மு.க. கிளைச்செயலாளராக இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. தற்போது சங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு பணிகளும்,நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இது போன்ற சம்பவங்களை அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, மனித நேயத்துடன் தடுக்க முன்வர வேண்டும் என அனைத்து எம்எல்ஏ.,க்களையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.

அதிமுக கிளைச்செயலாளர் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஜெகன் ஆணவக் கொலை வழக்கில் கைதான சங்கர், அதிமுக கிளைச் செயலாளர் இல்லை என்றும், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தான் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சங்கரின் ஊரான பெரியமுத்தூர் புளுகான் கொட்டாய் கிளைக் கழக செயலாளராக இருப்பவர் கண்ணாயிரம். இவர் ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறாராம். அங்கு ஈபிஎஸ் அணி சார்பில் கிளைச் செயலாளர் யாரும் இல்லையாம். அதேபோல, அவதானப்பட்டி கோவில் கிளைக் கழக செயலாளராக இருப்பவர் முருகன்.

ஆணவக்கொலை செய்த சங்கர் அதிமுக கிளைச் செயலாளர் எனப் பரவிவரும் தகவல்களை மறுத்து, அவர் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே, அவர் அதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்தவர்கள் ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த 2021 டிசம்பரில் நடைபெற்ற கட்சி தேர்தலின் அடிப்படையிலான நியமன அறிவிப்பை இதற்கு ஆதாரமாக வெளியிட்டுள்ளனர்.


Next Story