குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியது பயன்பாடாக உள்ளதா?


குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியது பயன்பாடாக உள்ளதா?
x

குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியது பயன்பாடாக உள்ளதா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்

குடிநீர் குழாய் இணைப்பு

குடிநீா் என்பது பொதுமக்களுக்கு இன்றியமையாத தேவையாக உள்ளது. இதனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகளும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. நகர்ப்புறங்களில் பெரும்பாலும் வீடுகளில் குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. கிராமப்புறங்களை பொறுத்தவரை அந்த ஊரில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் மூலம்தான் குடிநீர் வசதி உள்ளது. மேலும் சில கிராமங்களில் ஊரணி, கிணறுகள், குளங்கள் மூலம் குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் பல குக்கிராமங்களில் தண்ணீர் வசதி என்பது இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2019-ம் ஆண்டு ஜல் ஜீவன் மிஷன் என்று கூறப்படும் உயிர் நீர் இயக்கம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்பதே இலக்கு. 60 சதவீதத்திற்கு குறைவான குழாய் இணைப்புகளை கொண்ட மாநிலங்களில், இந்த திட்டம் மிகச்சிறப்பாக செயல்பட்டதில் தமிழகம் முதல் இடம் பிடித்து சமீபத்தில் விருது கிடைத்துள்ளது. இத்திட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்குவதில் 90 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

அலைச்சல் குறைந்தது

இத்திட்டத்தில் பயனாளிகளின் வீடுகளை அந்தந்த ஊராட்சியே தேர்வு செய்கிறது. அவர்களது வீட்டின் முன்பு குடிநீர் குழாய் வைத்து, அதில் தண்ணீர் பிடிப்பதற்காக சிமெண்டு தளமும் அமைக்கப்படுகிறது. மேலும் குடிநீர் ஆதாரத்தை கணக்கிட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஏற்கனவே உள்ளதா? அல்லது புதிதாக அமைக்க வேண்டி உள்ளதா? குடிநீர் திட்டம் மூலம் பைப் லைன் உள்ளதா? ஆழ்துளை கிணறு புதிதாக அமைக்க வேண்டி உள்ளதா? என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப தேவை அறிந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினால் கிராமப்புறங்களில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க செல்லும் அலைச்சல் குறைந்துள்ளது.

இத்திட்டம் குறித்து பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா கூறுகையில், "பெரம்பலூர் மாவட்டத்தில் 2020-21-ம் நிதி ஆண்டுக்கான ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் பெரம்பலூர் ஒன்றியத்தில் கவுல்பாளையம், கீழக்கரை, வடக்கு மாதவி, செங்குணம், நொச்சியம், புதுநடுவலூர் ஆகிய 6 கிராம ஊராட்சிகளிலும், வேப்பூர் ஒன்றியத்தில் மூங்கில்பாடி, ஆடுதுறை, கொளப்பாடி, காடூர், கீழப்பெரம்பலூர், புதுவேட்டக்குடி ஆகிய 6 கிராம ஊராட்சிகளிலும், ஆலத்தூர் ஒன்றியத்தில் பிலிமிசை, புஜங்கராயநல்லூர், ஜெமீன்பேரையூர், மேலமாத்தூர், அருணகிரிமங்கலம், சில்லக்குடி, சிறுகன்பூர், சிறுவயலூர் ஆகிய 8 கிராம ஊராட்சிகளிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் அகரம், மலையாளப்பட்டி, பிம்பலூர், காரியானூர், அனுக்கூர் ஆகிய 5 கிராம ஊராட்சிகளிலும் என மொத்தம் 25 கிராம ஊராட்சிகளில் உள்ள 78 குக்கிராமங்களில் மொத்தம் 20 ஆயிரத்து 118 வீடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் அவர்களது வீட்டின் முன்பே கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான செலவு ரூ.22 கோடியே 89 லட்சம் ஆகும். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் 2021-22-ம் நிதி ஆண்டிற்கு இந்த திட்டம் இல்லை. 2022-23-ம் ஆண்டில் ஆலத்தூர் ஒன்றியத்தில் ஆதனூர், காரை, எலந்தங்குழி, கூடலூர், ராமலிங்கபுரம், கீழமாத்தூர், சாத்தனூர் ஆகிய 7 கிராம ஊராட்சிகளில் ஆயிரத்து 959 வீடுகளுக்கு ரூ.1 கோடியே 99 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. இதில் தற்போது 20 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் 100 சதவீத பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தட்டுப்பாடின்றி குடிநீர்

பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்த லெட்சுமி வெங்கடேஷ் கூறுகையில், முன்பெல்லாம் கிராமத்தில் உள்ள வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு இருந்தால், அந்த வீடுகளில் உள்ளவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள் என்று எண்ணுவேன். எனது குடும்பத்தினர் தெருவில் உள்ள பொதுக்குழாயில் வரிசைப்படி நின்று தண்ணீர் பிடித்து வந்தோம். போதிய அளவு தண்ணீர் கிடைக்காது. தற்போது ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தால் எனது வீட்டின் முன்பே தற்போது குடிநீர் குழாய் இணைப்பு மூலம் தண்ணீர் போதிய அளவு கிடைக்கிறது. குடிநீர் பிரச்சினை தீர்ந்ததால் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த திட்டத்தை கொண்டு வந்த மத்திய-மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன், என்றார்.

செங்குணம் ஊராட்சி, அருமடல் கிராமத்தை சேர்ந்த பச்சையம்மாள் ராமசாமி கூறுகையில், இத்திட்டத்திற்கு முன்பு தெருக்குழாயில் மற்ற பெண்களுடன் சண்டையிட்டு தண்ணீர் பிடித்து வீட்டிற்கு வருவோம். அப்போது சில நாட்கள் தெருக்குழாயில் தண்ணீர் வராமல் போய்விடும். குடங்களை தூக்கிக்கொண்டு கேணிக்கு சென்று தண்ணீர் இரைத்து வருவோம். தற்போது இந்த திட்டத்தினால் அந்த அலைச்சல் குறைந்துள்ளது. தினமும் வீட்டிற்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வருவதால் கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர், என்றார்.

நேரம் மிச்சப்படுகிறது

வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் கீழப்பெரம்பலூர் ஊராட்சி வேள்விமங்கலம் பகுதியை சேர்ந்த பா.கலைச்செல்வி கூறுகையில், குடிநீருக்காக தெருக்களில் குடங்களோடு தற்போது நாங்கள் அலைவது இல்லை. இந்த திட்டத்தால் எங்களுடைய நேரம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் என்னை போன்ற பெண்கள் வீட்டு வேலைகளையும், குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்கும் நேரம் கிடைக்கிறது. வேலைக்கு சென்று வருமானத்தை பெருக்க வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் வீட்டின் அருகிலேயே தண்ணீர் பிடிக்கும்போது பணிச்சுமையும் குறைகிறது. ஏழை மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம், என்றார்.

வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளப்பட்டி ஊராட்சியில் இந்த திட்டத்தின்கீழ் குடிநீர் இணைப்பு பெற்ற மல்லிகா கூறுகையில், ஜல்ஜீவன் திட்டம் வருவதற்கு முன்பு 10 வீடுகளுக்கு ஒரு குடிநீர் இணைப்பு இருந்தது. ஆனால் இந்தத் திட்டம் வந்த பிறகு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பற்றாக்குறை இல்லாமல் தினமும் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கிறது. இந்த திட்டம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக கிராமப்புறங்களில் சிமெண்டு சாலைகளை பெயர்த்து எடுத்து குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், என்றார்.


Next Story