மனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆராய்ச்சி - சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்


மனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆராய்ச்சி - சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்
x

மனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆராய்ச்சி நடக்கிறது என சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கூறினார்.

கலந்துரையாடல்

திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் (என்.ஐ.டி.) சந்திரயான் திட்டம் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான வீரமுத்துவேல் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அடிப்படையில் விண்வெளி ஆராய்ச்சிகள் நாம் உள்ள பால்வெளி மண்டலம், கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவை தோன்றிய விதம் குறித்து நாம் இன்றும் தேடிக்கொண்டு தான் இருக்கிறோம். விண் ஆராய்ச்சிகளுக்கு நம் அருகில் இருக்கும் துணைக்கோளான நிலவு முதன்மையாகும்.

ஆராய்ச்சிகள் நடக்கிறது

ஏனென்றால் பிற கோள்களுக்கு செல்லும் நுழைவு வாயிலாக நிலவு உள்ளது. பூமியில் இருந்து விண்ணுக்கு ராக்கெட் அனுப்புவதை விட நிலவில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டால் ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருளின் அளவை குறைக்க முடியும். மேலும் தேவையான எரிபொருளை நிலவில் இருக்கும் தண்ணீர் மூலம் எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

சந்திரயான்-3 சந்தித்த சவால்கள்

மேலும் வருங்காலங்களில் மனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும் வகையில் ெதாடர்ந்து விண்வெளி ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நிலவின் தென் துருவத்தில் ஏராளமான கனிமங்கள் இருப்பதால் அதில் தரைஇறங்கிய முதல் நாடாக சாதனை படைத்துள்ளோம்.

வளா்ந்த நாடுகளான அமெரிக்கா 3 முறையும், ரஷியா 11 முறையும் நிலவை அடையும் முயற்சியில் தோல்வி கண்டன. இந்தநிலையில் நாம் 2-வது முயற்சியிலேயே வெற்றி கண்டுள்ளோம் என்பது பெருமைக்குரிய விஷயம்.

சந்திரயான்-3 ரோவர், தரையிறங்கும் முன் நிறைய சவால்களை சந்தித்தது. நிலவில் உள்ள ஈர்ப்பு விசையின் குறைவு, குறைந்த வெப்பநிலை போன்றவை நிலவில் தரையிறங்க சவால்களாக இருந்தன. இருப்பினும் சந்திரயான்-2 திட்டத்தின் மூலம் பாடம் கற்றுக்கொண்டு தவறுகளை சரிசெய்து விஞ்ஞானிகள் குழு அதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டனா்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story