திட்டங்களை கண்காணித்தால் தான் அது தொடர்ந்து தொய்வின்றி நடைபெறும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
தமிழ்நாட்டில் மத்திய அரசின் பங்களிப்புடன் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன.
மத்திய அரசின் பங்களிப்புடன் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்கும் இந்தக் குழுவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் துறைசார்ந்த வல்லுநர்களும் இடம்பெற்றுள்ளனர்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சுய உதவிக் குழுக்களுக்கு இந்தாண்டில் ரூ.25,000 கோடி நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 10,000 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆட்சியர் அலுவலகங்களிலும் சுய உதவிக் குழுக்கள் நடத்தும் உணவகங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு அதிக வங்கி கடன் வழங்கி சாதனை படைத்துள்ளோம். மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்களை விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள் வழங்கப்படும்
3,000 கிராம ஒழிப்பு சங்கங்களுக்கு வறுமை குறைப்பு நிதியாக ரூ.7.5 கோடி நிதி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. திட்டங்களை தொடர்ந்து கண்காணித்தால் தான் அது தொடர்ந்து தொய்வின்றி நடைபெறும். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதில் சுய உதவிக்குழுக்களின் பங்கேற்பு ஏற்படுத்தப்படும். நன்றே செய் அதனை இன்றே செய் எனும் வகையில், அனைத்து மக்களுக்கும் நலன் தரும் திட்டங்களை சிறிதும் தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்று அடைய அதிகாரிகள் முழு மனதுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.