ஓரின சேர்க்கை விவகாரத்தில் சிறுவன் கொல்லப்பட்டது அம்பலம்
தர்மபுரி அருகே 6 வயது சிறுவன் ஓரின சேர்க்கை விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதுதொடர்பாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுவன் கொலை
தர்மபுரி பகுதியில் பயன்பாடு இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றில் நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அந்த கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பிணமாக கிடந்த சிறுவனின் கைகள் துணியால் கட்டப்பட்டும், வாயில் துணி திணிக்கப்பட்டும் இருந்தது. சிறுவனின் கழுத்தில் விரல் நக கீறல்கள் இருந்தன. எனவே சிறுவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
சிறுவன் யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தது அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன் என்பதும், 2-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதும் தெரிய வந்தது. இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசாரும் சிறுவனை தேடி வந்துள்ளனர். இதற்கிடையே சிறுவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபர் கைது
சிறுவன் கொலை தொடர்பாக கிராம மக்களிடையே நடத்திய விசாரணையின் போது சந்தேகத்தின் பேரில் அதே ஊரை சேர்ந்த 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ் மகன் பிரகாஷ் ( வயது 19) என்ற வாலிபர் சிறுவனை கொலை செய்தது தெரிய வந்தது. மற்ற 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.
மேலும் கிருஷ்ணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார், கொலை வழக்கு மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாசை நேற்று கைது செய்தனர்.
பின்னர் போலீசார் பிரகாசிடம் தனி அறையில் வைத்து துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. போலீசாரிடம் பிரகாஷ் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-
ஓரின சேர்க்கை
பிரகாசுக்கு ஓரின சேர்க்கை பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அவருக்கு கொலையான 6 வயது சிறுவன் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. எனவே சிறுவனை அழைத்து கொண்டு கடந்த 16-ந் தேதி மாலையில் விளையாடுவோம் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். அப்போது, பயன்பாடு இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அழைத்து சென்று சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட பிரகாஷ் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி சிறுவனை அழைத்துக்கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சிறுவனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுவன், பிரகாசிடம் இருந்து தப்பிக்க முயன்றதாக தெரிகிறது.
கழுத்தை நெரித்து கொலை
உடனே பிரகாஷ், சிறுவனின் கைகளை கட்டி, வாயில் துணிகளை திணித்து சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் கொடூரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுவன் நடந்த விவரங்களை வெளியில் சொல்லி விடுவான் என நினைத்த பிரகாஷ், அவனை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
பின்னர் வழக்கம் போல எதுவும் நடக்காதது போல் ஊரில் பிரகாஷ் சுற்றி வந்துள்ளார். துர்நாற்றம் வீசவே சிறுவன் இறந்தது தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் பிரகாஷ் சிக்கிக் கொண்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
சாலை மறியல்
இந்த நிலையில் சிறுவன் கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாகவும், அவர்களை கைது செய்யக்கோரி அந்த கிராம மக்கள் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சட்டப்படி நடவடிக்கை
அப்போது சிறுவன் கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். இந்த கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.