சைக்கிள் நிறுத்தும் இடம் வகுப்பறையாக மாறிய அவலம்


சைக்கிள் நிறுத்தும் இடம் வகுப்பறையாக மாறிய அவலம்
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

வடதொரசலூர் அரசு பள்ளியில் சைக்கிள் நிறுத்தும் இடம் வகுப்பறையாக மாறிய அவலம்

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இங்கு 6-ஆம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சுமார் 270 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

அரசு நடுநிலைப்பள்ளியாக இருந்தபோது 3 கட்டிடங்களில் 6 வகுப்பறைகள் இருந்தன. இதில் ஒரு கட்டிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்ததால் 2 வகுப்பறை கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

சைக்கிள் நிறுத்தும் இடத்தில் வகுப்புகள்

இந்த நிலையில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக புதிய வகுப்பறை கட்டிடங்கள் எதுவும் கட்டப்படவில்லை. பாடம் நடத்துவதற்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் உள்ள சைக்கிள் நிறுத்தும் இடத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். சைக்கிள்களை திறந்த வெளியிலேயே நிறுத்தி வைக்க வேண்டிய அவல நிலையும் இருந்து வருகிறது.

மேலும் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 11 பணியிடங்கள் உள்ள நிலையில் 7 ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிவதாகவும் 4 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

40 சென்ட் நிலம் தானம்

மாணவர்களின் பரிதாப நிலையை பார்த்து இதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் வடதொரசலூர் கேட் அருகே அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கட்டிடம் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு 40 சென்ட் நிலம் தானமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பெயருக்கு கிரையம் செய்து வழங்கினார். இந்த இடத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டிடம் கட்டித் தர பொதுமக்கள் சார்பிலும், பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் சார்பிலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதே போல் பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு சார்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தரக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது நாள் வரை புதிய வகுப்பறை கட்டுவதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

4 பள்ளிகள்

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடதொரசலூர், பானையங்கால், நின்னையூர், ஆகிய கிராமங்களில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகள் கடந்த 2017- ம் ஆண்டு அரசு உயர் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.

இதே போல் முடியனுர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி கடந்த 2020-ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் இதுவரை இந்த 4 பள்ளிகளுக்கும் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படவில்லை என கூறப்படுகிறது. போதிய இடவசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் பள்ளி வறாண்டா மற்றும் மரத்தடியில் அமர்ந்து பாடம் படித்து வருவதாக கூறப்படுகிறது.

உடனடி நடவடிக்கை

உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி சதவீதத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏற்கனவே பின்தங்கி உள்ளது. மாணவா்கள் சரியாக தேர்வு எழுதாதது மட்டும் தேர்ச்சி விகிதம் குறைவதற்கு காரணம் அல்ல. ஆசிரியர்கள் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதி இன்மை ஆகியவையும் தேர்ச்சி விகிதம் குறைவதற்கு ஒரு காரணமாக உள்ளது.

எனவே அதிகாரிகள் இதை உணர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் போதிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புதல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கிராமத்தின் வளா்ச்சி

இதுகுறித்து பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்:-

வடதொரசலூர் நடுநிலைப்பள்ளியை அரசு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை புதிய கட்டிடம் கட்டாததால் மாணவர்கள் மரத்தடியிலும், சைக்கிள் நிறுத்துமிடத்திலும் படித்து வரும் அவல நிலை உள்ளது. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. கிராமத்தின் வளர்ச்சி என்பது அப்பகுதி மாணவர்களின் கல்வியை சார்ந்தது. எனவே கிராமப்புற மாணவர்கள் முன்னேற வேண்டுமெனில் அவர்களுக்கு முறையான கல்வி கிடைப்பது அவசியம். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கோப்புகள் நிலுவையில் உள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரி:-

வடதொரசலூர் அரசு பள்ளிக்கு நபார்டு திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் நின்னையூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பட்டா மாற்றம் செய்வதற்காக வருவாய் துறை அலுவலகத்தில் கோப்புகள் நிலுவையில் உள்ளதாகவும், பானையங்கால் மற்றும் முடியனூர் ஆகிய அரசு பள்ளிக்கு இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை. பள்ளிகளை தரம் உயர்த்திய பிறகு கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் போது பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் புதிய கட்டிடம் கட்ட காலதாமதம் ஆகிறது. எனவே வரும் காலங்களில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு முன்பாக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்து முதன்மை கல்வி அலுவலர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்த பிறகு தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story