'பெண் குழந்தை பெற்றெடுப்பதை கேவலமாக எண்ணுவது துரதிர்ஷ்டவசமானது' -ஐகோர்ட்டு வேதனை


பெண் குழந்தை பெற்றெடுப்பதை கேவலமாக எண்ணுவது துரதிர்ஷ்டவசமானது -ஐகோர்ட்டு வேதனை
x

பெண் குழந்தைகள் பெற்றெடுப்பதை கேவலமாக எண்ணுவது துரதிர்ஷ்டவசமானது என சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை,

வேலூர் மாவட்டம், பொன்னை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்-சத்யா தம்பதிக்கு ஏற்கனவே லத்திகா (வயது 5), ஹாசினி (3) என்ற பெண் குழந்தைகள் உள்ளனர். 2016-ம் ஆண்டு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறக்காமல், தொடர்ந்து பெண் குழந்தை பிறந்ததால் உற்றார், உறவினர் செய்த விமர்சனத்தால் சத்யா மனவேதனை அடைந்தார்.

இதையடுத்து ஹாசினிக்கும், பிறந்த ஒன்றரை மாத குழந்தைக்கும் விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சத்யா மட்டும் உயிர் பிழைத்துக்கொண்டார். குழந்தைகள் இருவரும் மரணம் அடைந்தனர்.

நல்லதங்காள் கதை

இதுகுறித்து சத்யா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் கூடுதல் செசன்சு கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் நல்லதங்காள் கதையை மேற்கோள் காட்டி, சத்யாவுக்கு குறைந்த தண்டனையாக 3 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் வழக்கை நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார். பின்னர், 'ஆணும்-பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்' என்ற பாரதியாரின் கவிதையை குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

மீண்டும் பெண் குழந்தை

பெண் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை கேவலமாக எண்ணுவதை இன்னும் திருத்திக்கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது. இந்த வழக்கு விசாரணையின்போது, சத்யா நேரில் ஆஜரானார். நடந்த சம்பவம் குறித்து கதறி அழுதார். அதுமட்டுமல்ல, தற்போது அவருக்கு 4-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இறந்துபோன பெண் குழந்தையின் பெயரான ஹாசினி என்ற பெயரைத்தான் இந்த குழந்தைக்கும் வைத்துள்ளார். மூத்த மகள் 6-வது வகுப்பு படிப்பதாக அவர் கூறினார். ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளும் திறமையானவர்கள்தான் என்பதை உணர்ந்து விட்டதாகவும், இரு பெண் குழந்தைகளுக்கும் நல்லமுறையில் கல்வி வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.

உத்தரவாதம்

எனவே, நல்லொழுக்க சட்டத்தின்படி அவரை விடுதலை செய்கிறேன். பெண் குழந்தைகள் என்று பாகுபாடு காட்டாமல், இரு பெண் குழந்தைகளையும் குறைந்தது இளங்கலை பட்டப்படிப்பு வரையிலாவது படிக்க வைக்க வேண்டும்.

இதுகுறித்து இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வேலூர் கோர்ட்டில் ஆஜராகி உத்தரவாத பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோன்ற உத்தரவாதத்தை சத்யாவின் கணவர் வெங்கடேசனும் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story