ஆதிதிராவிட மக்களின் உரிமையை நிலைநாட்டியது எனக்கு திருப்திகரமான நாள்


ஆதிதிராவிட மக்களின் உரிமையை நிலைநாட்டியது எனக்கு திருப்திகரமான நாள்
x

தென்முடியனூர் ஆதிதிராவிட மக்களின் உரிமையை நிலைநாட்டியது எனக்கு திருப்திகரமான நாள் என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலில் 80 ஆண்டுகளாக ஆதிதிராவிட சமூகத்தினர் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ய முடியாமல் வெளியே நின்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அரசு உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் முத்துமாரியம்மன் கோவிலுக்குள் ஆதிதிராவிட சமூகத்தினர் ஊர்வலமாக சென்று பொங்கல் வைத்து மகிழ்ச்சியோடு வழிபாடு செய்தனர்.

இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்களின் அடிப்படை உரிமையை நிலைநாட்டியதால் ஜனவரி 30-ந்தேதி (நேற்று முன்தினம்) போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் எனக்கு திருப்திகரமான நாள் என்றும், தற்செயலாக அன்று தீண்டாமை ஒழிப்பு நாளாகும் என்றும் நெகிழ்ச்சியோடு பதிவு செய்துள்ளார்.


Next Story